மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்பி பிரிஜ்பூஷனுக்கு நீதிமன்றம் சம்மன்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்பி பிரிஜ்பூஷனுக்கு நீதிமன்றம் சம்மன்!
Published on

ந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்து வருகிறார் பிரிஜ்பூஷன் சரண் சிங். இவர் பாஜக எம்பியும் ஆவார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்ட நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த வழக்கில் ஜூன் 15ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், ஜூன் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தலைவர் பதவி தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதி தந்தார்.

மல்யுத்த வீராங்கனைகளின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். உள்துறை அமைச்சர் அளித்த உத்தரவாதத்தின்பேரில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தற்காலிகமாக தங்களின் போராட்டத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் 354, 354D, 354A & 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் சுமார் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக டெல்லி நீதிமன்றம் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதன்படி இவர்கள் இருவரும் வரும் ஜூலை மாதம் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அந்த சம்மனில் கூறி உள்ளது.

இந்த சம்மன் குறித்து பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சரண்சிங் கூறும்போது, ‘ஜூலை 18ம் தேதி நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவேன். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெறுவதில் எனக்கு விருப்பமில்லை’ என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com