பேஸ்புக் நிறுவனரை பின்னுக்குத் தள்ளிய ஷாரூக் கான்.

பேஸ்புக் நிறுவனரை பின்னுக்குத் தள்ளிய ஷாரூக் கான்.

மெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ், நடப்பாண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் முதலிடம் பெற்றிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரி, பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரை ஷாரூக் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்திருக்கிறார்.

கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான ஆதரவை பெற்றிருக் கிறார்கள். டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்டவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

டைம்ஸ் இதழ் வாசகர்களில் 12 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அதில் 4 சதவீத வாக்குகளை ஷாரூக்கான் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக சரிவில் இருந்த ஷாரூக்கானின் சினிமா மார்கெட்டை அவரது சமீபத்திய வெளியீடான பதான் மீட்டுக் கொடுத்திருக்கிறது.

பதான் படம், குடியரசு தினத்தன்று வெளியானது. முன்னதாக படத்தின் டிரைலரில் தீபிகா உடுத்தி வந்த காவி நிற நீச்சல் உடை, பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால் படம் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது. கூடவே ஷாரூக்கானின் மகன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக வந்த சர்ச்சையால் ஷாரூக்கான் பெயர் அவ்வப்போது தலைப்புச் செய்திகள் அடிபட்டது.

அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வந்த நிலையில்தான்  ஷாருக்கானின் மகன் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார்.  படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. ஷாருக்கானின் செல்வாக்கிலும் பெரிய சரிவு ஏற்பட்டது. ஆர்யன் கான் ஜாமீனில் வெளியில் வந்தவுடன்  படப்பிடிப்பு தொடங்கியது.

தேச பக்தி படமாக உருவாக்கப்பட்டிருந்த பதான், வெளியான சில நாட்களிலேயே 300 கோடி வசூலைத் தொட்டது. இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்ச பாக்ஸ் ஆபிஸ் தொகையை வசூலித்த படமாக உருவெடுத்திருக்கிறது. பதானின் உண்மையான வசூல், 1200 கோடி இருக்கக்கூடும் என்கிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸில் பதான் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் விமர்சன ரீதியாக படம் பலருக்கு திருப்தியளிக்கவில்லை. சலித்துப் போன நம்பமுடியாத காட்சிகளும், வலுவில்லாத கதையும் ஓ.டி.டி வழியாக படத்தை பார்த்த பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com