முன்கூட்டியே கணித்த சரத்பவார், கட்சி பிளவுபடுவதை தவிர்க்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி!

முன்கூட்டியே கணித்த சரத்பவார், கட்சி பிளவுபடுவதை தவிர்க்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி!
Published on

தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்கவேண்டும் என்று சமீபகாலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பேசிவந்தார். கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கவும், தன்னுடைய ஆதரவாளர்கள் பா.ஜ.க பக்கம் போய்விடாமல் இருப்பதை தவிர்க்கவும் பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிக்காட்டிய சரத்பவாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்கவேண்டும் என்று மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நீண்டகாலமாகவே பேசி வந்தாலும் சமீப காலத்தில் சரத் பவார் பேச ஆரம்பித்திருந்தார். இதனையடுத்து பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டணிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார். இந்தியாவை பா.ஜ.கவிடமிருந்து காப்பாற்ற ஒரு மாற்றுச் சக்தி வந்தாகவேண்டும் என்றும் இது தொடர்பாக நிதிஷ் குமாரோ, மம்தா பானர்ஜியோ யார் முன்வந்தாலும் ஆதரிக்க தயாராக இருப்பதாக பேசியிருந்தார்.

இந்நிலையில், அஜித் பவார் தலைமையில் ஒரு குழு, கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவுக்கு ஆதரவாக எதையோ செய்யப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்திருப்பதாக மும்பை வட்டடாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் மகராஷ்டிரா அளவில் ஒரு கூட்டணியை அமைக்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க வலுவாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியாக தேசிய வாத காங்கிரஸ் கட்சி இருக்கிறது. சிவசேனாவோ ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இந்நிலையில் சரத்பவார் முதலில் மகராஷ்டிராவிலிருந்துதான் பா.ஜ.கவுக்கு எதிரான பணிகளை ஆரம்பித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அஜித்பவார் கட்சியை உடைத்து, பா.ஜ.கவுடன் கூட்டணி சேருவார் என்று அரசியல் விமர்சகர்கள் முன்னரே கூறியிருந்தார்கள்.

அஜித் பவார், பா.ஜ.கவினரோடு தொடர்பில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சரத் பவார், கட்சிக்குள் தனக்கிருக்கும் செல்வாக்கை சோதனை செய்து பார்க்க நினைத்தார். அதற்காக அவர் கையிலெடுத்துதான், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும், ஒரு வாரம் பேசுபொருளாக இருக்கும் என்று நினைத்தார்.

சரத்பவாரின் அரசியல் தெரிந்ததும், தொண்டர்களோடு தொண்டர்களாக வந்த அஜித்பவார் முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததும், மறுநாளே ராஜினாமாவை சரத்பவார் வாபஸ் வாங்கிவிட்டார். அதற்கு முன்னதாகவே கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அஜித்பவார் கோஷ்டி திட்டமிட்டிருந்தது அவருக்கு தெரியவில்லை. கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நினைத்து, தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சரத்பவாருக்கு, அஜித் பவாரின் அதிரடி மூவ் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்ற முறை அஜித் பவார் கட்சியை உடைத்து, பா.ஜ.கவோடு சேர்ந்தபோது அது சரத்பவார் போட்ட பிளான் என்று பேசியவர்களும் உண்டு. இம்முறை சரத்பவார் எதிர்பாராத நேரத்தில் அவரை நிலைகுலைய வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com