சவர்மாவை சாப்பிட்டு உயிரிழப்பு என்ற செய்தி தொடர் கதையாக மாறிவிட்ட நிலையில் சவர்மாவை குறித்தும், தற்போது சுகாதாரத்துறை வழங்கி உள்ள உத்தரவு குறித்தும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மக்கள் சாப்பிடும் சிற்றுண்டிகளில் இன்று சவர்மா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. வடை, பஜ்ஜி, காளான், காலிபிளவர், பாணி பூரி, என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்போது அதிகம் சவர்மாவை வாங்கி சாப்பிட ஆர்வம் கட்டுகின்றனர். இதனாலையே சவர்மா விற்பனை செய்யாத ஹோட்டல்களே இல்லை என்ற நிலைக்கு மாறிவிட்டது. மேலும் சாலை ஓரங்களில் செயல்படும் முழு நேர சவர்மா கடைகளும் வந்துவிட்டன.
அதே நேரம் சவர்மாவினுடைய வரலாறை பார்க்கும் பொழுது, 18 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் இவ்வகை உணவு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முதல் முதலில் கேரள மாநிலத்தில் இந்த உணவு வகை அறிமுகம் செய்யப்பட்டதாகவும், இதில் 20ம் மேற்பட்ட வகைகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதிலும் சிக்கன் சவர்மா, மட்டன் சவர்மா, பீஃப் சவர்மா, மெக்சிகன் சவர்மா போன்றவை அதிகம் விரும்பப்படும் வகைகள் ஆகும். ஒரு சிக்கன் சவர்மாவில் 392.3 கலோரியும், 11.9 சதவீத வைட்டமின் ஏவும், 13.8 சதவீத கால்சியம், 32.3 கிராம் புரதமும், 45.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 7.4 கிராம் நார் சத்தும், 49.3 கிராம் கொழுப்பு சத்தும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் சவர்மா சாப்பிடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகக் கொண்டே இருக்கக்கூடிய நேரத்தில் சவர்மாவால் உயிர் இழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நாமக்கல் உணவகம் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 14 வயதில் சிறுமி உயிரிழந்தார். மேலும் அந்த உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதை அடுத்து குறிப்பிட்ட உணவகத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய உணவகங்களில் சுகாதாரத் தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அனைத்து வகையான கடைகளையும் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட வேண்டும் என்றும், சுகாதார சீர்கேட்டை விளைவிக்க கூடிய வகையில் உள்ள உணவு தயாரிப்பு கூடங்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்தை சீல் வைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.