ஜொலிக்கும் தங்க தேநீர்!

ஜொலிக்கும் தங்க தேநீர்!

சுவையான உணவுகள் தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் லக்னோவைச் சேர்ந்த FOOD BLOGGER ஒருவர் 24 கேரட் தங்க இழைகள்ல் போர்த்தப்பட்ட தங்க தேநீர் குறித்த புதுமையான டீயைப் பற்றிப் பகிர்ந்திருந்தார். தற்போது அந்த தங்க தேநீர் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

லக்னோ உணவகம் ஒன்று தங்க இழைகள் மிதக்கும் அந்த கோல்ட் சாய் தயாரித்து தங்களுடைய வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறது. இணையத்தில் அதைக் கண்டு பலர் இம்ப்ரெஸ் ஆனாலும் சிலர் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்கவும் தவறவில்லை. காரணம், கோல்டு சாய் தயாரிப்பவர் வழக்கமாக டீ தயாரிக்கும் முறையில் மலாய் டீ...அதாவது மசாலா டீ (கொதிக்கும் பாலில் டீத்தூள், ஏலாக்காய், மிளகு, இஞ்சி, லவங்கம், பட்டை எல்லாம் சேர்த்து தயாரிப்பது) தயாரித்து அதை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேலே மிகக்கவனமாக கோல்டு ஃபாயில் பேப்பரைப் பொருத்துகிறார். இது தான் 24 கேரட் கோல்டு சாய் என்று அவர்கள் அதற்கொரு பெயரிட்டு அறிமுகப்படுத்துகிறார்கள். இதன் விலை ரூ150 என்பது கூடுதல் தகவல்.

இப்படித்தான் ஓராண்டுக்கு முன்பு டல்கோனா காஃபீ என்றொரு புதுமையான காஃபீ இணையத்தை வலம் வந்தது. சமூக ஊடகங்கள் அனைத்திலும் மனம் போன போக்கில் பலரும் இந்தக் காஃபீயைத் தங்களது வீடுகளில் தயாரித்து மேக்கிங் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்களுக்குத் தங்களை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ள இப்படி ஏதாவது தேவைப்படுகிறது.

கேரளாவுக்கு டூர் சென்றால் கட்டன் சாயா என்று தருகிறார்கள். இங்குள்ள நாயர் டீக் கடைகளிலும் கூட அது கிடைக்கும். அவர்கள் கூற்றுப்படி, மலையாளிகளின் சாய் மேக்கிங் நம்முடையதைப் போல கொதிக்க வைத்து தயாராவதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

மூணாறு டீ எஸ்டேட் ஒன்றில் பல்வேறு விதமான டீத்தூள் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு காத்திருக்கையில் அங்கிருந்த சாய் கடையில் மாஸ்டர் சொன்னதை வைத்துப் பார்த்தால் அருமையான சாய் தயாரிக்க பால் வேண்டவே வேண்டாம்.

ஒரு சிறு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் வெந்நீரை நன்கு சூடாக்கி அது கொதிப்பதற்கு முன் ஸ்டவ் ஆஃப் செய்து விட்டு அதில் பெளடராக இல்லாமல் காய்ந்த டீ இலைகள் போலிருக்கும் அசல் டீத்தூளைப் போட்டு மூடி விட்டு 3 லிருந்து 5 நிமிடங்கள் அதன் எசன்ஸ் பரவும் வரை காத்திருந்து பிறகு மூடியைத் திறந்து டீயை வடிகட்டி அருந்தத் தருகிறார்கள். இந்த டீயை நீங்கள் பீங்கான் கப்பில் சரிக்கும் போது அது பொன்னை உருக்கி வார்த்தாற் போலிருக்கிறது. இதல்லவோ கோல்டு டீ! மற்றபடி கோல்டு ஃபாயில் பேப்பரை சாய் மேலே போட்டு கோல்டு டீ என்று அருந்துவதெல்லாம் எந்த வகை என்று தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com