இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை இந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதோடு காற்று மாசுபாட்டால் இந்தியாவின் பொருளாதாரம் குறைகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்றும் கூட டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழையைப் பொழிய சோதனை நடைபெற்றது. ஆனால் மேக கூட்டங்களில் போதிய ஈரத்தன்மை இல்லாததால், இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
செயற்கை மழை பொழிவதற்கு மேக கூட்டங்களில் 50% ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்று நடைபெற்ற செயற்கை மழை சோதனை தோல்வி அடைந்த நிலையில், இத்திட்டத்தை தற்காலிகமாக மாநில அரசு ஒத்தி வைத்துள்ளது.
ஐநா சபையைச் சேர்ந்த 128 நிபுணர்கள், 71 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதே ஆண்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் காற்று மாசுபட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2022 இல் 38% அதிகமாகும். இந்தப் பேரழிவிற்கு புதை வடிவ எரிபொருள்களே மிக முக்கிய காரணம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதில் அதிகபட்சமாக அனல்மின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் நிலக்கரியால் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக வாகன ஓட்டிகளுக்கு தினசரி பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் உபயோகத்தால் 2.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட உயிரிழப்புகளால், இந்தியாவிற்கு சுமார் 339 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த இழப்பு மட்டும் 9.5% என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக 20 நாட்கள் வெப்ப அலைகளை அனுபவித்ததால், 247 பில்லியன் மனித உழைப்பு நேரம் வீணாகி விட்டதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு குறித்த இது போன்ற அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்தாலும், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பேரழிவுகளுக்கான ஆதாரங்கள் தொடர்ந்து வலுவாக உள்ளன. இந்நிலையில் சுத்தமான காற்றுக்கான யுக்திகளை, தேசிய சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலில் கட்டாயம் இணைக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து வலுவான திட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.