

வறுமை, குடும்பச் சூழல், வேலைக்குச் செல்லும் கட்டாயம், கல்வி கற்பதில் ஆர்வம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இந்த இடைநிற்றலைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசு, 'காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தும் திட்டம் போன்ற பல திட்டங்களை மாணவர்களுக்காக கொண்டு வந்து அதை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது.
அதேபோல், ஒவ்வொரு பள்ளிக்கு உட்பட்ட ஆசிரியர்களும், இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய அறிவுரை அளித்து, மீண்டும் பள்ளியில் சேர வழிவகை செய்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட பள்ளிகளிலும் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையும் அதே முனைப்பை காட்டுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மாணவர் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பணியாற்றி வரும் சூழலில், குழந்தைகளில் பள்ளி இடைநிற்றல் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டுக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) வெளியிட்ட தகவலில்படி, இந்திய அளவில் தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) 0.3 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) 3.5 சதவீதமும், உயர்நிலைப் பள்ளிகளில் (9, 10-ம் வகுப்புகள்) 11.5 சதவீதமும் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் இருந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 37,626 அரசு பள்ளிகள், 8,254 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,890 தனியார் பள்ளிகள், 165 இதர பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 935 பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த பள்ளிகளில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 167 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட மாணவர்கள் இடைநிற்றல் புள்ளி விவரப்பட்டியலில், தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் 2.7 சதவீதமாகவும் நடுநிலைப்பள்ளியில் 2.8 சதவீதமாகவும், உயர்நிலைப்பள்ளியில் 8.5 சதவீதமாகவும் உள்ளதாக தெரியவந்ததுள்ளது.
ஆனால் அதேசமயம், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இடைநிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் என்றாலும், அதற்கு முந்தைய ஆண்டுடன் (2023-24) பார்க்கையில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருப்பதையே இந்த புள்ளி விவரப்பட்டியல் காட்டுகிறது.
கடந்த 2023-24-ம் ஆண்டின் நிலவரப்படி மத்திய அரசின் புள்ளி விவர கணக்கின்படி தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ‘பூஜ்ஜியம்' என்ற நிலையை எட்டி இருந்தாலும், உயர்நிலைப்பள்ளிகளில் 7.7 சதவீதமாகவும் இருந்ததுள்ளது கவனிக்கத்தக்கது.
இதனை அடிப்படையாக கொண்டு தான் தமிழகத்தில் இடைநிற்றலே இல்லை என தமிழக பள்ளிக்கல்வித் துறை சொல்லி வந்த நிலையில் 2024-25-ம் ஆண்டு புள்ளி விவரத்தில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருப்பதை மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
அந்த வரிசையில் இடைநிற்றல் விகிதத்தை பொறுத்தவரையில், 2023-24-ம் ஆண்டு குறைந்துள்ளதையும், 2024-25-ம் ஆண்டு அதிகரித்துள்ளதையும் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நிலையற்ற தன்மை நிலவி வருவதை காட்டுகிறது.