ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய உக்ரைன் நாட்டு ராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நடந்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன.
இதன்மூலம் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ரஷ்யாவில் துன்புறுத்தப்பட்டு, அங்கிருந்து தப்பி வந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் ஒருவரின் எலும்பும் தோலுமான அதிர்ச்சிப் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவித்ததாவது;
'உக்ரைனிய ராணுவ சிப்பாய் மைக்கைலோ டியானோவ் ரஷ்யாவின் பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தார். அவரது சக போர்க் கைதிகள் பலர் இன்னும் ரஷ்ய சிறையில் வாடுகிறார்கள்.
அரை உயிரும் கால் உயிருமாக இந்த வீரர் திரும்பி இருப்பதைப் பாருங்கள்.. போர் கைதிகள் குறித்த ஜெனிவா உடன் படிக்கைகளை ரஷ்யா இப்படித்தான் மோசமாகக் கடைப்பிடிக்கிறது. நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இப்படித்தான் தொடர்ந்து வருகிறது.
- இவ்வாறு உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.