ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக பெரிய கலகத்தை ஏற்படுத்த முயன்ற வாக்னர் குழுவின் தலைவர் 'ப்ரிகோஜின்' அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் வாக்னர் என்ற தனியார் மிலிட்டரி குழு கடந்த மாதம் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக புரட்சி செய்தது. இதன் தலைவர் ப்ரிகோஜின் சொன்னதற்கு இணங்க, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் குழு முன்னேறியது. இதனால் அங்கே உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் திடீரென பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் தலையிட்டார். இதனால் தங்களின் புரட்சியை கைவிடுவதாக வாரினர் குழுத் தலைவர் அறிவித்தார். ரஷ்ய அரசாங்கமும் வாக்னர் குழுவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாகத் தெரிவித்தது.
புரட்சிக்குப் பின்னர் பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்த வாக்னர் குழுத் தலைவர் 'ப்ரிகோஜின்' சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் ரஷ்யா திரும்பினார். அவர் ரஷ்யா திரும்பிய பிறகு பொதுவெளியில் தன் முகத்தைக் காட்டவில்லை. அவர் சார்ந்த எவ்வித படங்களும் வெளியாகவில்லை. சமீபத்தில் ப்ரிகோஜின் அதிபர் புதினை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அவர்கள் சந்தித்தது தொடர்பான படங்களும் வெளியாகவில்லை. இதற்கிடையே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வாக்னர் குழுவின் தலைவர் கொலை செய்யப்படலாம் அல்லது நிரந்தரமாக ரஷ்ய அரசால் சிறை வைக்கப்படலாம் எனக் கூறினர். இதற்கு அமெரிக்க அதிபர் பைடன் கூட பிரிகோஜின் உணவில் விஷம் கலக்கப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்திருந்தார்.
இப்படி ப்ரிகோஜின் வருங்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கை அசைக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்ட் ஒன்றில் அவர் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் அவரை இழிவு படுத்துவதுபோல் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவுக்கு எதிராக கலகம் செய்த காரணத்தினால், ரஷ்ய ஊடகங்கள் வேண்டுமென்றே இவரது மோசமான புகைப்படங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டு வருகிறது எனச் சொல்லப்படுகிறது. உண்மையில் உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு பல தருணங்களில் உறுதுணையாக இருந்தது வாக்னர் படை தான். இருப்பினும் ரஷ்ய இராணுவத்தின் செயல்பாடுகள் வாக்னர் குழுத் தலைவருக்கு பிடிக்காததால், அதற்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தார். மேலும் உக்ரேன் போரில் அவர்களுக்கு போதுமான ஆயுதத்தை ரஷ்ய ராணுவம் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுவரை ரஷ்யாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதினுக்கு எதிராக யாரும் இவ்வளவு பெரிய புரட்சி செய்ததில்லை. வாக்னர் குழுவின் புரட்சியை புதின் சமாளித்திருந்தாலும், இனி வரும் காலங்களில் இதுபோல பல சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.