

மாசியில் சுப முகூர்த்த நிகழ்வுகளுக்காக நகைகள் வாங்குவது வழக்கம். இடையே வரும் பங்குனி தவிர்த்து அடுத்து வரும் சித்திரை வைகாசியிலும் திருமண விழாக்கள் களைகட்டும்.ஆனால், ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை, சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று (25 -02-2026) சற்றே உயர்ந்து சவரன் விலை ரூ.1.20 லட்சத்தை நோக்கி நகர்ந்தது. இந்த விலையுயர்வு நகைப் பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 வர்த்தக தினங்களில் சுமார் ரூ.4,400 அளவில் அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளி விலையும் நேற்று சற்றே உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம்: 1 கிராம் - ரூ.14,890 | 1 சவரன் - ரூ.1,19,120
24 காரட் தங்கம்: 1 கிராம் - ரூ.16,244 | 1 சவரன் - ரூ.1,29,952
வெள்ளி விலை: 1 கிராம் - ரூ.295 | 1 கிலோ - ரூ.2,95,000
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,890 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.16,244 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,29,952 ஆகவும் விற்பனை ஆனது.
அதே போல வெள்ளி விலையிலும் மாற்றம் வந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.295 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தற்போதைய சூழலில் நிகழ்வுகளுக்கு மட்டும் அவசரம் எனில் குறைந்த அளவு நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.90 ஆக உள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு தொடர்ந்து வெகுவாக அதிகரித்துள்ளததும் ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விலை சுமார் 280% - 300% வரை உயர்ந்து தங்கத்தை நடுத்தர மக்களும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2015-ல் ரூ.26,000-க்கு விற்ற தங்கம், இன்று ரூ.1.20 லட்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் (2015–2025/26) இந்தியாவில் தங்கம் விலை எப்படி மாற்றம் கண்டது மற்றும் ஏன் உயர்வு ஏற்பட்டது ?இன்றும் தங்கத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை பார்ப்போம்.
10 வருடங்கள் 10g எடை கொண்ட 24 K கேரட் தங்கம் கடந்து வந்த விலைப் பட்டியல் இதோ..
2015 - ரூபாய். 26,300,
2016 - ரூபாய்.28,600
2017 - ரூபாய் 29,700
2018 - ரூபாய் 31,400
2019 -ரூபாய் 35,200,
2020 -ரூபாய் 48,650 (COVID-19 காரணமாக மிக உயர்வு)
2021 - ரூபாய் 48,720,
2022 - ரூபாய் 52,670,
2023 - ரூபாய் 65,330,
2024 - ரூபாய் 79,800,
2025- ரூபாய் 1,01,350 (₹1 லட்சத்தை கடந்தது)
2026- ரூபாய் 1,19,120
தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் பல காரணங்கள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் வரையறுத்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.90 ஆகச் சரிந்துள்ளதால், இறக்குமதி செலவு அதிகரித்து தங்கம் விலை உயர்கிறது.
சர்வதேச சூழல்: உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலைகள், உலகளாவிய பொருளாதார நிலை மந்தம், அரசியல் சீர்கேடுகள் (போர், வர்த்தக போர்) காரணமாக சுரங்கப் பாதுகாப்பு சொத்தின் (safe haven) போக்கில் தங்கம் தேவை அதிகரித்தது போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் உலக மார்க்கெட் நிர்ணயிக்கும் அமெரிக்க டாலர் பல நேரங்களில் பலவீனமடைந்திருப்பதால், தங்கம் மற்ற இடர் சொத்துகளுடன் ஒப்பிடும்போது மேலும் கவர்ச்சிகரமாக காணப்படுகிறது என்றும் தங்கத்தின் பெரும்பாலான அளவையும் இறக்குமதி செய்யும் இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனம் கூடுதல் செலவினமாக வந்து விலையை உயர்த்தியது என்றும் கூறப்படுகிறது.
முதலீட்டு மாற்றங்கள்: இவைகளுடன் சுரங்க உற்பத்தி குறைவு அல்லது அதன் மந்தமான நிலையும் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்தது. மேலும் தனிநபர் முதலீடாக டிஜிட்டல் தங்கம் மற்றும் ETF (Gold ETFs) போன்ற புதிய முதலீட்டு முறைகளால் விலை உயர்வு உருவானதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நிபுணர்களின் ஆலோசனை:
"தங்கம் என்பது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த பாதுகாப்பு (Inflation Hedge). விலை ஏறினாலும் இறங்கினாலும், நீண்ட கால அடிப்படையில் இது லாபகரமான முதலீடுதான். ஆனால், தற்போதைய உச்சத்தில் முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள் தங்கள் நிதிச் சூழலைப் பொறுத்து முடிவெடுப்பது அவசியம்" என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தினந்தோறும் தங்கத்தின் விலையில் மாற்றம் என்ன என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவதுடன் அதை சிறிது சிறிதாக வாங்கி சேமிக்கவும் விரும்புவதாக கடைகளுக்கு வந்த பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். காரணம் இனி தங்கத்தின் விலையில் குறைவு என்ற மாற்றம் வரப்போவதில்லை என்பது தான்.