பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 2018-ல் அந்நாட்டு பிரதமரானார். இந்நிலையில் இம்ரான் கானின் கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் இம்ரான் கான் ஆட்சியையும், பிரதமர் பதவியையும் இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் அரசை கண்டித்து இம்ரான் கான் கட்சியினர், நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணம் வஜிராபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் இம்ரான் கான் பங்கேற்றார். அப்போது கண்டெய்னரில் நின்று பேசிய இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுடப்பட்டது.
இதில் இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாயகட்டத்தை தாண்டியதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். இருப்பினும் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது;
பாகிஸ்தானில் எதிர்பாராதவிதமாக திடீரென்று இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.