‘இந்தியப் பிரதமர் மீது புகார் அளிக்க வேண்டும்‘ பாகிஸ்தான் நடிகையின் காமெடி ட்வீட்!

‘இந்தியப் பிரதமர் மீது புகார் அளிக்க வேண்டும்‘ பாகிஸ்தான் நடிகையின் காமெடி ட்வீட்!
Published on

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தார். அப்போது துணை ராணுவப் படையினரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் கைது செய்யப்பட்டது அவருடைய கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டமும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனானுல்லா, “தேசிய கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதன் காரணமாகவே இம்ரான்கான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார்.

பாகிஸ்தானில் இத்தகைய பரபரப்பான சூழ்நிலை நிலவும்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை ஒருவர், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் புகார் அளிக்க வேண்டும்‘ என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு டெல்லி போலீசார் அளித்திருக்கும் பதில் பலரையும் யோசிக்க வைத்திருப்பதோடு, நகைச்சுவையாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி காவல் துறையின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா? எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய உளவு அமைப்பின் மீது நான் புகார் அளிக்க வேண்டும். இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரியின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்து இருக்கும் டெல்லி போலீஸ், ‘நாங்கள் பயந்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் நாங்கள் அதிகாரத்தைப் பெறவில்லை. ஆனால், ஒன்றை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் எப்படி ட்வீட் செய்கிறீர்கள்’ என்று கேட்டிருப்பது பலரையும் நகைச்சுவையில் ஆழ்த்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com