சைபர் க்ரைம் மோசடி கும்பல் பயன்படுத்திய ஏராளமான வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மோசடிக்காரர்கள் கணினிகளை ஹேக் செய்து பணம் பறித்து வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் உலகில் ஏராளமான மோசடிகள் தினம் தினம் நடைபெற்று வருகின்றன. எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலுமே மக்கள் இந்த வலையில் விழத்தான் செய்கிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டவர்கள்தான் இந்தியாவில் தங்கள் கைவரிசையை காண்பிக்கின்றனர். சமீபத்தில்தான் மோசடி செய்பவர்களின் 17 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்தவகையில் தற்போது கணினிகளின் வாயிலாக ஹேக் செய்து பணம் பறிக்கும் கும்பல் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். நீங்கள் அதை அழுத்திய உடன், நீங்கள் சில ஆபாச இணையதளங்களை பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வரும். இதனால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
இந்த தண்டனையிலிருந்து விடுபட ரூ30,290 அபராத தொகை செலுத்த வேண்டும். செலுத்தினால் மட்டுமே உங்கள் கணினி மீண்டும் செயல்படும் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள். இந்த அபராதத் தொகையை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் மோசடி கும்பல் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அந்த நபரின் க்ரெடிக் கார்டு விவரங்களைத் திருடப்பட்டு, பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி இணையதளத்துக்கு சீனா சேவை வழங்கி உள்ளதை கண்டறிந்துள்ளனர். தற்போது இந்த சட்ட விரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு சீனர் இந்திய மக்களை ஏமாற்றி 100 கோடி பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்கள் எந்த ஆன்லைன் மெசேஜ்களையும் நம்பாமல் இருப்பது நல்லது என்று தெரிவிக்கப்படுகிறது.