கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
கர்நாடக தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பா.ஜ.க. கூறியுள்ளதுடன் அதற்காக வியூகம் வைத்து இப்போதே அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தவிர மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது. எனவே இந்த முறை கர்நாடகத்தில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்ற தேர்தலில் பாதாமி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, இந்த முறை கோலார் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க.வும் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளன. ஆனால், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி முதல் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னபட்டனா தொகுதியில் குமாரசாமியும், ராம்நகர் தொகுதியில் அவரது மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாலும் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று சித்தராமையா முழுநம்பிக்கையுடன் இருக்கிறார்.
2013 ஆம் ஆண்டில் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியில் முதல்வரானார். ஆனால், 2018 ஆம் ஆண்டு தேர்தலில் வருணா தொகுதியை மகன் யதீந்திராவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் தேவெகெளடாவிடம் தோற்ற சித்தராமையா, பாதாமி தொகுதியில் போராடி வென்றார்.
சித்தராமையா மைசூரைச் சேர்ந்தவர். பெங்களூரிலிருந்து, மைசூரிலிருந்து பாதாமி நீண்ட தொலைவு என்பதால் தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்பதால் அருகில் உள்ள கோலார் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும் கோலார் தொகுதியில் சித்தராமையாவின் குருபா சமூகத்தினர் அதிகம் உள்ளனர். முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி. மக்களும் கணிசமான அளவில் இருப்பதால் இந்த தொகுதி தமக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகிறார். எனவேதான் கோலாரில் துணிந்து களம் இறங்க சித்தராமையா முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.