சேலத்தில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை நிகழ்வு...

சேலத்தில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை நிகழ்வு...

ந்தியப் பாரம்பர்யக் கலைகளில் கம்புகளைக் கொண்டு சுற்றி எதிரிகளை அடக்கும் சிலம்பமும் ஒன்று. கம்புகள் கொண்டு பம்பரம் போல் சுழன்று ஆடி எதிராளி அசரும்போது வீழ்த்தும் அற்புதமான கலை இது. அதிலும் முக்கியமாக நம் தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த சிலம்பாட்டத்தை  பெருவாரியாக விரும்பி அதைக் கற்றுக்கொள்வார்கள். தற்போது தற்காப்புக் கலைகளின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் நகரங்களிலும் சிலம்பம் கற்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

       இந்த சிலம்பக் கலையை வளர்க்க உலக சிலம்ப தினமான ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்றாம் தேதியைத் தேர்ந்தெடுத்து சில உலகசாதனை அமைப்புகள் உலக அளவில் சிலம்ப சாதனை முயற்சியை மேற்கொண்டனர். அதில் சேலத்தை சேர்ந்த ஐந்து சிலம்ப பயிற்சியாளர்கள் தங்களிடம் சிலம்பம் பயிலும் சுமார் 500  மாணவர்களை ஒருங்கிணைத்து சேலம் பத்மவாணி கல்லூரி மைதானத்தில் விடாமல் இருபது நிமிடங்கள் இருப்பத்து மூன்று வினாடிகள் சிலம்பப் பயிற்சி செய்து உலக சாதனைக்கான அங்கீகாரத்தை பெற்றனர்.

      இது குறித்து நிகழ்வில் பங்கு பெற்ற பயிற்சியாளர் களில் இளைய தலைமுறை சிலம்பப் பயிற்சிக் கூடத்தின் தலைமை ஆசான் சிவானந்த் நம்மிடம் கூறுகையில்,

      “சிலம்பம் நமது வீரமிக்க தமிழ்க்கலைகளில் ஒன்று. இதைக் கற்றுக்கொள்வதினால் உடல் உறுதியுடன் பதட்டமில்லாத மன ஆரோக்கியம் பெறலாம். முக்கியமாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்கும் துணி வையும் தன்னம்பிக்கை தரும். முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு ஏற்ற கலை இது.

     ஒரே மாஸ்டரிடம் பயின்ற ஐந்து மாஸ்டர்கள் இணைந்து இந்த உலகசாதனை முயற்சியை சேலத்தில் மேற்கொண்டோம். எங்களுக்கு பக்கபலமாக யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர்ஸ் கலாம்ஸ்புக் ஆப் ரெக்கார்ட்ஸ், மாம் பார் இந்தியா பவுண்டேசன் அண்ட் இந்தியன் யூத் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆகியவை இருந்தன. சரியாக ஒன்பது மணிக்குத் துவங்கிய சிலம்பம் பயிற்சி இரண்டு நிமிடங்கள் விடாமல் சுழற்றி சாதனை செய்து இந்த உலக சாதனைக்கான அவார்டைப் பெற்றோம். அமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களுக்கு பனியன், மெடல்,தொப்பி, பேட்ச் சான்றிதழ் போன்றவைகள் அளிக்கப்பட்டது.

தற்சமயம் வெகு குறைவான சன்மானத்துடன் எங்கள் சேலம் சுற்றியுள்ள் கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தந்து வருகிறோம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வு நடந்துள்ளது எங்களைப் போன்ற பயிற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    கடந்த வருடம்தான் அரசு இந்த சிலம்பத்தை கலைகளில் ஒன்றாக அங்கீகரித்து சில சலுகைகளை வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இன்னும் கூட சர்வேதேச போட்டிகளில். சிலம்பம் தனக்குரிய இடத்தைப் பெற வேண்டும். என்பதுதான் எங்கள் விருப்பம் “என்கிறார்.

      வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து அறிமுகமான விளையாட்டுகளுக்கு நாம் தரும் முக்கியத்துவம் நம் நாட்டுக்கலையான சிலம்பம் போன்றவைகளுக்கும் இருந்தால் நம் பாரம்பர்யதுடன் தற்காப்பு விழிப்புணர்வும் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com