

சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதில் உலக நாடுகளுக்கே மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழும் சிங்கப்பூர், தற்போது தனது பள்ளி ஒழுங்குமுறை விதிகளிலும் மிக முக்கியமான, அதிரடியான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பள்ளி வன்முறைகள், இணையவழி துன்புறுத்தல்கள் மற்றும் மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் புதிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மிக முக்கிய அங்கமாக, கடுமையான தவறை செய்யும் மாணவர்களுக்கு 'பிரம்படி' வழங்கும் நடைமுறை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பிரம்படிக்கு எதிரான குரல்கள் ஒலித்து வரும் வேளையில், சிங்கப்பூர் அரசின் இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும், அதே நேரத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
சட்டத்தின் பின்னணி:
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளிகளிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் சக மாணவர்களை துன்புறுத்தும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதத் தடுப்பதற்காக ஓராண்டுகாலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களிடம் விரிவான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில், மாணவர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டவும், தவறு செய்ய அஞ்சும் மனநிலையை உருவாக்கவும் இத்தகைய கடுமையான தண்டனை அவசியம் என்று முடிவு செய்யப்பட்டு, இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த புதிய சட்ட விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
விதிகளும் வரம்புகளும்:
புதிய சட்டத்தின்படி, சாதாரணத் தவறுகளுக்கெல்லாம் பிரம்படி வழங்கப்பட மாட்டாது. தண்டனை அல்ல. அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் தோல்வியடையும் பட்சத்தில், இறுதி முயற்சியாக மட்டுமே பிரம்படி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி: சிங்கப்பூரின் குற்றவியல் சட்ட நடைமுறைகளின்படி பெண்களுக்கு பிரம்படி வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மேல்வகுப்பு பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே பிரம்படி தண்டனை விதிக்கப்படும். மாணவிகள் இத்தகைய கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்குப் பள்ளியிலேயே தடுத்து வைப்பது, பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம் அல்லது நன்னடத்தை சான்றிதழ் மதிப்பெண்களை குறைப்பது போன்ற மாற்றுத் தண்டனைகள் வழங்கப்படும்.
முதல் முறை கடுமையான தவறு செய்யும் மாணவர்களுக்கு 1 பிரம்படியும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 பிரம்படிகள் வரையும் வழங்கப்படும்.
கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள்:
ஆசிரியர்கள் தங்களின் தனிப்பட்ட கோபத்திற்காக மாணவர்களை அடிக்க இந்த சட்டம் எவ்வகையிலும் அனுமதிக்கவில்லை. பிரம்படி வழங்குவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை கல்வி அமைச்சகம் விதித்துள்ளது. பள்ளியின் முதல்வர் முறைப்படி எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்த பிறகே பிரம்படி வழங்கப்பட வேண்டும். மேலும், இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களால் மட்டுமே, மூடிய அறைக்குள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இது நிறைவேற்றப்படும்.
தண்டனை வழங்குவதற்கு முன், அந்த மாணவனின் வயது, மனநிலை, முதிர்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகள் ஏதேனும் உள்ளதா என்பது போன்ற காரணிகளைப் பள்ளி நிர்வாகம் முழுமையாக ஆராயும். தண்டனைக்கு உள்ளாக்கப்படும் மாணவர்களின் மனநலன் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களின் நல்வாழ்வையும் முன்னேற்றத்தையும் பள்ளிகள் தொடர்ந்து கண்காணிக்கும். அவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங் மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.'தவறு செய்தால் தண்டனை நிச்சயம்' என்ற பயத்தின் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்.
நவீனக் கல்வியில் பிரம்படி அவசியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், வளர்ந்து வரும் இணையக் குற்றங்களிலிருந்தும் வன்முறையிலிருந்தும் எதிர்காலத் தலைமுறையை காக்க சிங்கப்பூர் அரசு எடுத்துள்ள இந்த 'அன்பான கண்டிப்பு' ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு புதிய பாடமாக அமையலாம்.