தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேஷியா. இதன் தலைநகரம் ஜகார்த்தா. அந்நாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இதை 7.6 எனக் கணக்கிட்டுள்ளனர். இதனால் சுனாமி பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயத்தால் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு, மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
இதுபோன்று நிகழ்வது ஒருமுறை, இருமுறையல்ல. அடிக்கடி என்பதை உலக நாடுகளே அறியும். இந்தோனேசியாவின் தலைநகராக இதுவரை ஜகார்த்தா நகரமே இருந்து வருகிறது. தற்போது கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள நுசாந்தரா என்ற நகருக்கு தலைநகரை மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் 2024ம் ஆண்டுக்குள் இதை செய்து முடிக்கவும் அந்நாடு தயாராகி வருகிறது. புதிய தலைநகரை மாற்றுவதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. புதிய தலைநகரான நுசாந்தரா தீவு போர்னியோ தீவில் அமைந்துள்ளது. ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1,300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இடம் நுசாந்தரா. ‘நுசாந்தரா’ என்றால் உள்ளூர் மொழியில் 'தீவுக்கூட்டம்' என்று பொருள்.
நிலநடுக்கம், சுனாமி போன்ற மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவே அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ‘சுற்றுச்சூழல் காரணங்களை முழுமையாக ஆய்வு செய்யாததால் இத்திட்டமே தோல்வியடையலாம்’ என்றும் ஒருபுறம் வல்லுநர்கள் குழு எச்சரித்து வருகிறது. மேலும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜகார்த்தா நகரம் சுற்றுச்சூழல் பிரச்னைகளை அதிகமாகவே சந்தித்து வருகிறது. சதுப்பு நிலத்தில் அமைந்த இந்தப் பகுதியில் நிகழும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் கூடிய விரைவில் ஜகார்த்தா நகரமே கடலில் மூழ்கும் அயாயம் உள்ளதாகவும் வல்லுநர்களால் கூறப்படுகிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் வரும் 2050ம் ஆண்டுக்குள் ஜகார்த்தா நகரமே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தற்போது இந்நாட்டின் புதிய தலைநகர் அமைய உள்ள நுசாந்தராவில் மொத்தமே 37 லட்சம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். ஆகவே, இந்த இடத்துக்கு இந்தோனேஷியாவின் தலைநகரை மாற்றுவது மிகவும் பாதுகாப்பாகவும் மக்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அந்நாடு முடிவு செய்துள்ளது.