

தமிழக அரசியலில் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது திருமாவளவன் தலைவராக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி. 2026 தேர்தலில் திமுக கூட்டணியுடன் தொடருமா அல்லது தனித்து செயல்படுவதா என்ற விவாதம் நடந்தாலும் திருமா திமுகவுக்கு ஆதரவாகவே சமூக நீதி மற்றும் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும் சென்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றிய விசிக இம்முறை திமுக கூட்டணியில் இணைந்து 8 தொகுதிகளில் களம் கண்டு காட்டுமன்னார் கோயில், திண்டிவனம் என 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டமன்றத்தில் நுழைந்த விசிக இந்தத் தேர்தலில் இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதும் திமுகவுடன் எழுந்த தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் அக்கட்சியின் தலைவர் திருமாவின் குழப்பம் மிகுந்த முடிவுகளும் அக்கட்சியினரிடையே சிறு சலிப்பைத் தந்தது எனலாம். எனினும் திமுக தலைமை தரும் முடிவை ஏற்போம் என்றது அக்கட்சி .
ஆனால் தற்போது ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் தேவை எனும் நிலையில் தவெக கட்சி விசிகவிடம் ஆதரவு கோரி நிற்பது அக்கட்சியின் மீதான அனைவரது கவனத்தையும் திருப்பி உள்ளது. தவெகவின் ஆட்சி அமைக்கும் ஆசை நிறைவேற விசிக வின் ஆதரவும் நிச்சயம் தேவை எனும் சூழலில் தற்போது தவெக மீதான அதிருப்தியை விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தனது பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது .
குறிப்பாக தவெகவின் தலைவர் நேரில் வந்து ஆதரவு கேட்காத அலட்சியம், அக்கட்சியின் நிர்வாகிகளின் பேச்சு ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தவுடன் விஜய் தற்போது யாரிடமெல்லாம் ஆதரவை கேட்கிறாரோ அந்த கட்சி கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து பேசியிருக்க வேண்டும். விஜய்க்குள்ள கரிஷ்மாவை, அவரின் நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்துவிட்டு அவரிடம் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக் கொள்ள விஜயை பயன்படுத்துகிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடனேயே திமுக, அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சம் அல்லவா!.. விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறார்கள் என பேசுவது என்னவகை அரசியல் அறம்? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்..இன்று காலை நடந்த தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது
மேலும் வாட்ஸ்அப்பில் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்புவதா என்றும் தவெக மீது குற்றம் சாட்டியுள்ளார் .
"வாட்ஸ் அப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பிறகு “பதிலளியுங்கள்” என்று சொல்வதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? வெற்றிக்குப் பிறகு, தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தாமல், விஜய் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பையும் பெறுவதற்காக விஷயங்களை மிகுந்த பெருந்தன்மையுடன் கையாண்டிருக்க வேண்டும். ஆனால், வெற்றிச் செய்தி வந்த உடனேயே, இது முடியாட்சி சகாப்தம் முடிவுக்கு வந்த நாள் என்று அறிவித்து, அவர் தனது ஆணவத்தையும் பழிவாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரியா?
மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என ஐந்தாம் தலைமுறை வரை வம்ச அரசியலின் சுமையைச் சுமக்கும் காங்கிரஸுடன் கைகோர்த்துவிட்டு, பின்னர் வம்ச அரசியலைப் பற்றிப் பேசுவதை விடப் பெரிய முரண் வேறு என்ன இருக்க முடியும்? திமுகவை ஒழிக்கப்பட்ட முடியாட்சி என்று முத்திரை குத்திவிட்டு, பின்னர் வெற்றி பெறுவதற்காக திமுக தலைமையில் கூட்டணி அமைத்த பிறகு, எந்தவித தயக்கமும் இன்றி இடதுசாரிகள் மற்றும் விசிகவிடம் ஆதரவு கோருவதில் என்ன தர்க்கமோ நியாயமோ இருக்கிறது? விஜய்யின் கவர்ச்சியையும் வீர பிம்பத்தையும் பயன்படுத்தி, அவரைச் சுற்றியுள்ள சில இரண்டாம் நிலைத் தலைவர்கள், அவரை ஒரு இளவரசனைப் போல அடைத்து வைத்து, வெளியே வரவிடாமல் தடுத்து, திமுக மீதான தங்களின் தனிப்பட்ட பழிவாங்கல்களைத் தீர்த்துக்கொள்ள அவரைச் சுரண்டுகிறார்கள்.
என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே ஆளுநரை சந்திக்கும்போது மரியாதை நிமித்தமாக மலர்க்கொத்து கொடுப்பது புரோட்டகால் கூட தவெகவுக்கு தெரியவில்லை என்றும் ஆளுநரிடம் தந்த கடிதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும் இணையத்தில் தவெகவினர் மீதான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவசியம் ஆதரவு தேவையான வேலையில் தவெகவின் இது போன்ற அலட்சியம் அரசு அமைக்கத் தடையாகி விடுமோ என்று கவலையில் உள்ளனர் நம்பிக்கையுடன் வாக்களித்தவர்கள்.