

எஸ்.ஐ.ஆர். பணியின் பொழுது நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை தமிழ்நாட்டில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக ஒட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை 10 நாட்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உயிரிழந்தோர், இரட்டை பதிவு உள்ளவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் எண்ணத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதல்ல என்று அறிவிக்க கோரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், திமுக, திரிணமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மாநிலம் வாரியாக மனுக்களை தனித்தனியாக விசாரித்தது.
தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்த பொழுது, திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் பொழுது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளின் பொழுது விடுபட்ட 1.16 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால் சுமார் 1.22 கோடி வாக்காளர்களுக்கு இன்னும் முறையான நோட்டீஸ் சென்றடையவில்லை என்றும், காரணம் தெரிவிக்காமல் பெயர்களை நீக்கினால் மக்கள் எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குழம்புவார்கள் என்றும் முறையிட்டார். எனவே முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலை காரணத்துடன் தமிழ்நாட்டின் அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் ஆணையம் ஒட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமைதான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சரி பார்ப்பதற்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்கள் 10 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமோ தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் எஸ்.ஐ.ஆர். பணிக்கு போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளை மாநில அரசு வழங்க வேண்டும், அத்துடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து மாவட்ட எஸ்.பி. களுக்கு டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.