கொரியரில் வந்த மண்டை ஓடு. தஞ்சையில் பரபரப்பு!

கொரியரில் வந்த மண்டை ஓடு. தஞ்சையில் பரபரப்பு!

ஞ்சையில் உள்ள திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற பகுதியில் வசித்து வருபவர் முகமது காசிம். இவர் அதே பகுதியிலுள்ள ஒரு மசூதியின் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. நமக்கெல்லாம் யார் கொரியர் அனுப்பப் போறாங்க இது நம்முடைய மகனுக்கு வந்திருக்கும் என நினைத்து, பார்சலை வாங்கிய அவர் அதைப் பிரித்து பார்க்காமல் அப்படியே வைத்திருந்தார்.

அவருக்கு வந்த பார்சலில் முறையான அனுப்புனர் முகவரி எதுவும் இல்லை. இந்நிலையில் தனது மகன் வந்த பிறகு பார்சலை அவரிடம் கொடுத்து பிரித்து பார்த்தபோது, உள்ளே மண்டை ஓடு இருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மண்டையோட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், இதுகுறித்து திருவையாறு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரும் அதன் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். 

முதலில் பார்சல் வந்த கம்பெனியில் விசாரித்தபோது, இதேபோல மேலும் இரண்டு பார்சல் வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பார்சல்களும் யாருக்கு வந்தது என விசாரித்து அந்த பார்சலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இந்த பார்சலை அனுப்பியதாக தஞ்சாவூர் ரஹ்மான் நகரை சேர்ந்த அப்துல்லா, ராவுத்தர் பாளையத்தை சேர்ந்த முபின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபரைத் தேடி வருகின்றனர். 

விசாரணையில் இவர்கள் கூறியதாவது, "கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் முகமது காசிம் தொடர்ந்து ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். அப்பகுதியில் நடக்கும் இறப்பு குறித்து முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடுவதில்லை. இறுதி சடங்கு செய்ய இடமும் வழங்காமல் ஒருதலைச் பட்சமாக செயல்படுகிறார். இவர்கள் மூவருமே பல திருமண விவகாரங்களிலும், காதலுக்கும் இடையூறாக இருப்பதால், அவர்களை மிரட்டி மனரீதியாக கஷ்டப்படுத்த வேண்டுமென நினைத்தோம். 

பின்னர் சுடுகாட்டிற்கு சென்று மூன்று மண்டை ஓட்டுகளை எடுத்து வந்து அதை தனித்தனி பெட்டியில் வைத்து, எலுமிச்சை பழம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை அதில் வைத்து மாந்திரீகம் செய்தது போல் அவர்களை பயமுறுத்த நினைத்தோம். பின்னர் கிப்ட் பேப்பரில் அட்டைப்பெட்டியை பார்சல் செய்து அவர்களின் முகவரிக்கு கொரியரில் அனுப்பி வைத்தோம்." என்று கூறினர். 

மேலும் இச்சம்பவம் குறித்து பல கோணங்களில் போலீசார் இவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com