
இந்த மாதம் இந்திய இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்தபோதும், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி.பார்கவா, “நாம் எந்த மிரட்டலுக்கும் தலை வணங்கக்கூடாது” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டின் சுயமரியாதையையும், அரசுக்கு ஆதரவையும் காக்க, ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் அவர் கர்ஜித்துள்ளார்.
தேவையை அதிகரிக்கவும், வாகனத் துறையை மீட்டெடுக்கவும், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கவும் சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என ஆர்.சி.பார்கவா அழைப்பு விடுத்தார்.
உள்நாட்டு அளவில், அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைப்பது உதவும் என்று அவர் கூறினார். அதாவது, "அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது, உள்நாட்டு விற்பனையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார இழப்பை ஈடுகட்டலாம்.
சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைப்பதன் மூலம் கார் சந்தை புத்துயிர் பெறும், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இது அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும் என்று பார்கவா நம்புகிறார்.
இது குறைந்த விலையில் கார் வாங்கும் மக்களுக்குப் பெரிதும் உதவும் என்றும் நிறுவனம் கருதுகிறது. எனினும், அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் கார்களின் தேவை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுக்கு ஏற்பவே எம்எஸ்ஐஎல் (மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்) தங்கள் உற்பத்தித் திறனை அவ்வளவு வேகமாக அதிகரிப்பார்கள் என்று அவர் கூறினார்.
சிறிய கார்கள் (செடான் மற்றும் ஹேட்ச்பேக்) விற்பனை சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. ஆனால், எஸ்யூவி-களின் வலுவான வளர்ச்சி இதுவரை ஒட்டுமொத்த வாகனத் துறையையும் தூண்டி வந்தது. தற்போது, அந்த வளர்ச்சியும் குறைந்து, 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 1.6% சரிந்துள்ளது.
வரி விதிப்பு (tariffs) குறித்த விவாதத்திற்குப் பரஸ்பர ஒருமித்த கருத்து தேவை என்று பார்கவா கூறினார். இந்தியாவின் சுங்க வரி 50% ஆக உயர்ந்துள்ளது. மேலும், எந்தவிதமான அழுத்தத்துக்கும் அடிபணியாமல், அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி கட்டமைப்பில் மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்களுக்கு இடையேயான வரி விதிப்பில் சமநிலை தேவை என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் மின்சார கார்களுக்கு 5% ஜிஎஸ்டி-யும், ஹைப்ரிட் கார்களுக்கு 28% ஜிஎஸ்டி-யும் உள்ளது. ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இரண்டுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு உள்ளது.
பிஎஸ்-6 தர விதிமுறைகள் வாகனங்களின் விலையை அதிகரித்தன, இதனால் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற சிரமப்படுகின்றனர். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, ஜப்பானின் கீ கார் (Kei cars) மாதிரியை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
விநியோகச் சங்கிலி (supply chain) குறித்த கவலையை அவர் எழுப்பினார். அரிய வகை மின்காந்தங்கள் (rare earth magnets) மீதான கட்டுப்பாடுகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார். இங்கிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், எதிர்கால ஒப்பந்தங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.