

பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் லோக்சபாவிற்குள் 'இ-சிகரெட்' (E-cigarette) எனப்படும் மின்னணு சிகரெட் பிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது போன்றே, பல்வேறு காலகட்டங்களில் எம்.பி.க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளைத் தடையை மீறிப் படம் பிடித்தது உள்ளிட்ட விதிமீறல் சம்பவங்களும் நடந்துள்ளன. இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், லோக்சபா செயலகம் தற்போது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமராக்கள் மற்றும் அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள் பார்லிமென்ட்டுக்கு உள்ளே எடுத்து வர எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து எம்பிக்களுக்கும் லோக்சபா செயலகம் அனுப்பியுள்ளது.
பார்லிமென்ட்டுக்குள் எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்துவது சில சமயங்களில் எம்பிக்களுடைய தனியுரிமையை பாதிக்கின்றன. மேலும் இம்மாதிரியான பொருட்கள் பார்லிமென்ட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும் உள்ளன. எனவே இது போன்ற பொருட்களை எம்.பி.க்கள் அனைவரும் பார்லிமென்ட் வளாகத்திற்குள் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள் சந்தையில் மிக எளிதாக கிடைக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட் வாட்ச், பென் கேமராக்கள் நிறைய வந்துள்ளன. இந்த உபகரணங்கள் காட்சிகளையும், ஒலிகளையும் பதிவு செய்யும் வசதிகளுடன் உள்ளதால் இவற்றை தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பொருட்களை எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்திற்குள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.