ஸ்மார்ட்போனால் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை.

ஸ்மார்ட்போனால் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை.

நாம் தினசரி அறிந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான விஷயங்கள் சிக்னல்களாக மாற்றப்பட்டு நமது மூளையை அடைகிறது. ஒருவர் திறன்பேசியை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவருக்கு அதிலிருந்து கிடைக்கும் செய்திகளானது பெரும்பாலும் வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் கிடைக்கிறது. இத்துடன் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வேறு சில விஷயங்களும் மனதில் நுழைந்து ஒரு காந்தம் போல செயல்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்த அடிமையாகி விடுவார்கள் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என நினைத்துப்பாருங்கள். குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கமானது, கொரோனா காலகட்டத்தில் அதிகரித்தது. அச்சமயத்தில் குழந்தைகள் அதிகநேரம் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதால், பலர் மனச்சோர்வுக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் ஸ்மார்ட்போனை பயன் படுத்தியதால், சராசரி நேரத்தை விட கொரோனா காலத்தில் ஸ்மார்ட்போன் பார்க்கும் திரைநேரம் அதிகரித்து காணப்பட்டது.  

சிறு குழந்தைகளின் மூளை வளர்ந்து வரும் நிலையில் இருப்பதால், தான் ஸ்மார்ட்போனில் பார்ப்பது நல்லதா கெட்டதா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அதே சமயம் ஏதேனும் கார்ட்டூன் காட்சிகளைப் பார்க்கும்போது, குழந்தைகள் நன்றாக உணர்ந்தால், அவர்களின் மூலையில் டோபமைன் என்ற வேதிப்பொருள் வெளியேறும். அது அக்குழந்தையை மகிழ்ச்சியாக உணர வைக்கும். இவ்வகையான டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்துதல், ஒரு வகையில் குழந்தைகளை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. இதன் விளைவாக விளையாட்டு, படிப்பு நண்பர்களுடன் பழகுவது போன்றவற்றை மறந்து, டோபமைன் கிளர்ச்சியைத் தரும் ஸ்மார்ட் ஃபோனிலேயே குழந்தைகள் அதிகம் மூழ்கி விடுகிறார்கள். 

இது அவர்களை ஒரு செயற்கை உலகில் வாழ வைக்கிறது. அதனால் குழப்பம், பதற்றம், பயம் போன்றவற்றிற்கு அவர்கள் ஆளாவதால், நிஜ உலகை சந்திக்க முடியாமல் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இது குழந்தைகளின் சமூக கட்டமைப்பை சீர்குலைப்பதால், எதிர்காலத்தில் பிறருடன் பழகவே அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ல் இந்தியாவில் 90 கோடி மக்கள் வரை இணையத்தை பயன்படுத்துவார்கள் என சொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த இணையமானது இரண்டு பக்கங்களையும் கொண்டுள்ளது என நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே திறன்பேசியை எப்போதும் பயன்படுத்தாமல், அவற்றின் தேவையை உணர்ந்து சீரான முறையில் பயன்படுத்துவது முக்கியமாகும். 

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திறன்பேசி போன்ற மின்சாதனங்களை கொடுக்காமல், எந்த வயதில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன் வேண்டும் என குழந்தை வாதிட்டால், அவர்களுக்கு பேசி புரியவைக்க முற்படுங்கள். குழந்தைகளின் படிப்புக்கு ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கிறதென்றால், அதை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். 

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு திறன்பேசியால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும். எவ்வளவு காலம் கழித்து அவர்களுக்கு மின்சாதனந் பொருட்களின் பயன்பாடு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு குழந்தைகள் மனநல பாதிப்பில்லாமல் இருப்பார்கள் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com