விமானத்தில் புகை 'ஸ்பைஸ் ஜெட்' அவசரமாக தரையிறக்கம்!
கோவாவில் இருந்து ஹைதராபாத் வந்த 'ஸ்பைஸ் ஜெட்' பயணியர் விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால், அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாவது:
கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி, ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில், 86 பயணியர் வந்தனர்.
விமானம் ஹைதராபாதை நெருங்கிய பொது , பைலட் அறையில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, ஹைதராபாத் விமானம் நிலைய கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, அங்கு தரையிறங்க வேண்டிய ஒன்பது விமானங்கள் மாற்றி விடப்பட்டன. பின், ஸ்பைஸ் ஜெட் விமானம் இரவு 11:00 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதில் வந்த பயணியரும் விமானத்தின் அவசரவழி வாயிலாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், விமானங்களை இயக்குவது சம்பந்தமாகவும் அடிக்கடி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்நிறுவனம், ஏற்கனவே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரத்தின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது.எனவே, 50 சதவீத விமானங்களை மட்டும் அக்., 29 வரை இயக்க, அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.