புகையில்லா போகி பண்டிகை! அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்!

Bogi
Bogi
Published on

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று சுற்றுசூழல், மற்றும் காலநிலை மாற்றத் துறை, அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

Meyyanathan
Meyyanathan

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com