"காணவில்லை" காங்கிரஸ் டுவிட் பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி!

"காணவில்லை" காங்கிரஸ் டுவிட் பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. இதற்கு “ராகுல் காந்தியை தேடிக் கொண்டிருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என்று ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்.

“நான் இப்போதுதான் அமேதி தொகுதியிலிருந்து தூரான்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். என்னை காணவில்லை என்று காங்கிரஸார் டுவிட்டரில் போஸ்டர் போட்டுள்ளனர். நீங்கள் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தியை தேடிக் கொண்டிருந்தால் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்” என்று டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதை பார்த்து அவரை காணவில்லை என்று காங்கிரஸ் டுவிட்டரில் அவரது படத்தை வெளியிட்டு போஸ்டர் வெளியிட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காந்தி குடும்பத்தினரிடமிருந்து அமேதி தொகுதியை இரானி கைப்பற்றினார். அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். எனினும் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் வெற்றிபெற்றார். அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

ராகுல்காந்தி தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பேசுகையில் நரேந்திர மோடி அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் மோடி பேசி வருகிறார். ஒரு வேளை கடவுள் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தால் அவருக்கே மோடி பாடம் எடுப்பார் என்றும் கூறியிருந்தார்.

அமேதி தொகுதிக்கு ராகுல் ஒரு நன்மையும் செய்யாததால்தான் அவரை மக்கள் தோற்கடித்தனர். அவர் வயநாடு எம்.பி.யாக இருந்தால் அந்த தொகுதி மக்களுக்கும் ஒன்றும் செய்யமாட்டார். எனவே அங்கிருந்தும் மக்கள் அவரை துரத்தியடிக்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி சமீபத்தில் கூறியிருந்தார்.

அவரை வயநாடுக்கு அனுப்பியது நான்தான். அவர் அமேதி எம்.பி.யாக இருந்தபோது 80 சதவீத மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்கூட இல்லை. ஒரு மருத்துவக் கல்லூரிகூட அமைக்கப்படவில்லை. கேந்திர வித்யாலயா அல்லது சைனிக் பள்ளிகள் இல்லை. நான் எம்.பி.யான பின்னர்தான் இவை ஏற்படுத்தப்பட்டன என்றும் இரானி கூறியிருந்தார்.

ராகுல் வயநாடு எம்.பி.யாக இருக்கும்வரை அந்த மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. எனவே அடுத்த முறை அவர் எம்.பி.யாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்றும் இரானி கூறியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com