சோலார் சக்தியில் இயங்கும் குளுகுளு ஏசி பயணிகள் நிழற்கூடம்!

சோலார் சக்தியில் இயங்கும் குளுகுளு ஏசி பயணிகள் நிழற்கூடம்!

ருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 58 லட்சம் ரூபாயை ஒதுக்கி, உலக அளவில் முதல் முறையாக சோலார் சக்தியின் மூலம் இயங்கும் முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு அடுக்கு பயணிகள் நிழல்கூடம் ஒன்றை அமைத்து இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டிருக்கும் இந்த நிழற்கூடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து இருக்கிறார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த பயணியர் நிழற்கூட தரைத்தளத்தின் ஒரு பகுதி குளிரூட்டப்பட்ட அறையாகவும், மற்றொரு பகுதி மின்விசிறிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவை தவிர, இதே வளாகத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கப் பயன்படுத்தப்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நிழற்கூடத்தில் அகில இந்திய வானொளிச் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் பயணிகள் நிழற்கூடத்தின் முதல் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்குப் பாலூட்டும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறையில் தொலைக்காட்சி வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் சிறிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தருமபுரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்கள் குறித்த தகவல்களும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குளுகுளு நிழற்கூடம் குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், “இந்த பயணிகள் நிழற்கூடம் ஒரு முன்மாதிரியாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பயணிகள் நிழற்கூடங்கள் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் அமைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com