வடகொரியாவுக்குள் பாய்ந்த படைவீரர் - நேரடி சாட்சி பேட்டி!

மாதிரி படம்
மாதிரி படம்

தென்கொரியாவில் இருந்து வடகொரியாவுக்குள் அமெரிக்கப் படை வீரர் திடீரெனப் பாய்ந்ததை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.

டிராவிஸ் கிங் என்கிற அந்த அமெரிக்கப் படை வீரர் இரவு விடுதி வழக்குக்குப் பிறகு, இராணுவ ரீதியான துறை நடவடிக்கைக்காக, தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அப்போது சியோல் அருகில் உள்ள விமானநிலையத்தில் இருந்து தப்பிய அவர், இரண்டு கொரியாக்களுக்கும் இடைப்பட்ட இராணுவமயம் இல்லாத பகுதிக்கு சுற்றுலா செல்லும் குழுவில் சேர்ந்து கொண்டார்.

அப்போது, அவர் திடீரென வட கொரியப் பகுதிக்குள் பாய்ந்து சென்றதைப் பார்த்து அந்தக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நடந்ததை நேரில் கண்ட நியூசிலாந்தைச் சேர்ந்த சாரா லெஸ்லீ என்கிற வழக்குரைஞர் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
ஜூலை 18 அன்று நடைபெற்ற அந்த சம்பவத்தை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்கிறார் அவர்.

நாற்பது பேர் கொண்ட குழுவாக இவர்கள் அந்தப் பகுதிக்குச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் குழுவில் இருந்த பெரும்பாலானவர்கள், தென்கொரியப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படையினர் சொல்லும் குறிப்புகளை கவனித்தபடி இருந்துள்ளனர். “நாங்கள் எல்லாரும் படம் எடுத்துக்கொண்டோ பேசிக்கொண்டோ இருந்தோம். ஆனால் அவர் மட்டும் நாள் முழுவதும் யாரிடமும் எதுவும் பேசாதபடி இருந்தார். நான் அப்போதுதான் வடகொரியப் பகுதியின் பக்கம் பார்க்கத் தொடங்கியிருப்பேன். யாரோ என் பின்னால் இருந்து ஓடினார்கள். என்னுடைய பார்வையிலிருந்து அவ்வளவு விரைவாக அவர் ஓடினார். உண்மையில் அந்த ஓட்டம் அவ்வளவு வேகம்!. என்னைக் கடந்து போய்விட்டார் என்பதையே என்னால் உணரமுடியவில்லை.” என வியப்போடு பேசுகிறார், சாரா.

பன்முஞ்சம் என்கிற அந்த கிராமத்தில்தான், 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த ஊரின் மையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

”அவர் இப்படி எல்லை கடந்து சென்றது, முட்டாள்தனமாக இருந்தது. அவர் ஒரு படை வீரர் என்பதும் அப்போது எனக்குத் தெரியாது. அப்படிப் போவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்தப் பகுதியை விட்டு எங்கள் பேருந்து வெளியில் வந்ததும் குழுவில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியேதான் இருந்தோம்.” என படபடப்பு மாறாமல் பேசினார், சாரா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com