

(இந்தியா / லைஃப்ஸ்டைல்/ ஆரோக்யம்)
இந்திய ராணுவம், திணைப் பயிர் பயன்பாட்டை ராணுவவீரர்களுக்கான அன்றாட உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குவதன் மூலம் அதன் நுகர்வை ஊக்குவித்து வருகிறது. புதன்கிழமை வெளியானதொரு அறிக்கையின் படி, "ஐ.நா 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், தினைப்பயிர்களின் நுகர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய ராணுவம் அவற்றை வீரர்களின் ரேஷன்களில் இணைத்துள்ளது."
இந்திய ராணுவத்தின் இந்த முக்கிய முடிவானது, அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நமது பாரம்பரியமிக்க மரபு முறை உணவுப் பயிர்களான தினையுடன் இருந்த பந்தத்தை அறவே துடைத்தொழித்த கோதுமை ஆட்டா மாவின் உபயோகத்துக்கு மாற்றாக அமையும் என்பதோடு வீரர்களின் உணவில் கோதுமையின் தாக்கமும், புழக்கமும் பெரிதும் குறைக்கப்படும் என்பதையும் உறுதி செய்கிறது
மூன்று பிரபலமான தினை வகைகள் -- பஜ்ரா, ஜோவர் மற்றும் ராகி -- படையினருக்கு வழங்கப்படும். தினை புரதங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இவை வீரர்களின் உணவில் ஊட்டச்சத்து மேலாண்மையை அதிகரிக்கும்.
இராணுவத்தின் கூற்றுப்படி, பாரம்பரிய தினை உணவுகள் நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகளைத் தன்னகத்தே பெற்றிருப்பதோடு நமது புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, அத்துடன் வாழ்க்கை முறை நோய்களைத் தணிப்பதில் மற்றும் வீரர்களின் திருப்தி மற்றும் மன உறுதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகவும் அவை அமையும், அதற்கான திறன் அந்த உணவுகளுக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.
இவற்றைச் சமைக்க இராணுவம் அதன் சமையற்காரர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகள், பராகானாக்கள், கேன்டீன்கள் மற்றும் வீட்டு சமையல் அறைகள் வரை தினைகளை பரவலாக இணைக்க அதன் அனைத்து அமைப்புகளுக்கும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டு முதல் ராணுவ வீரர்களுக்கான தானியங்களின் அங்கீகரிக்கப்பட்ட உரிமையில் (அரிசி மற்றும் கோதுமை அட்டா) 25 சதவீதத்திற்கு மிகாமல் தினை மாவை கொள்முதல் செய்ய அரசு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆரோக்கியமான, சுவையான மற்றும் சத்தான தினை உணவுகளை தயாரிக்க, சமையல் கலைஞர்களுக்கு மையப்படுத்தப்பட்ட
பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கொள்முதல் மற்றும் விநியோகம் கோரப்பட்ட அளவை அடிப்படையாகக் கொண்டது.
வடக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட தினை பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சிஎஸ்டி கேன்டீன்கள் மூலம் தினை அறிமுகப்படுத்தப்படும் அதே வேளையில், சர்வதேச தினை ஆண்டின் ஒரு பகுதியாக வணிக வளாகங்களில் இவற்றை எளிதில் பார்வையில் படும்படியான இடத்தில் வைக்க பிரத்யேக வசதிகளும் செய்யப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கல்வி நிறுவனங்களிலும் வருங்காலத்தில் தினை பயன்பாட்டை அதிகரிக்க ‘உங்கள் தினையை அறிவோம்’ போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.