

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) இன்று (செப்.11) வயது மூப்பு காரணமாக காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். டிவி மட்டுமின்றி சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புது வருஷம், பாய்ஸ், எஸ் மேடம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி படத்தில் பக்கத்துவீட்டுக்காரர் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையை கொண்டிருக்கும்.
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழை வளர்த்தவர். தொடர்ந்து பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டுவருபவர். குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு படித்தவரும் பாமரரும் புரியும்வண்ணம் பட்டிமன்றங்களைத் தரம் குறையாமல் எளிமையாக நடத்தி, தமிழ்த் தொண்டாற்றிவருபவர். பல ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.