‘தூங்கும் முதல்வர் ஸ்டாலினை யாராவது எழுப்பி விடுங்க’ குஷ்பு விமர்சனம்!

‘தூங்கும் முதல்வர் ஸ்டாலினை யாராவது எழுப்பி விடுங்க’ குஷ்பு விமர்சனம்!

திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவ்வப்போது குற்றம் சுமத்தி வருகின்றன. அதற்கேற்றாற்போல் கடந்த நான்கு நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், சென்னையில் அதுவும் தலைநகரின் மையப் பகுதியான பெரம்பூர் நகைக் கடை ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து தங்கம், வைரம் என ஒன்பது கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் கடைகளும் வழக்கறிஞர்களின் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. நேற்று இரண்டு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது மர்ம கும்பல் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் ரத்த காயங்களோடு தப்பி ஓடியுள்ளார். கொலை செய்த கொலையாளிகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கிறார்கள். இதைப் பார்த்து பொதுமக்கள் பயத்தில் பெரிதும் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ‘கோவையில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டும், அறிவாளால் வெட்டியும் ஒரு படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண் முன்னே ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இதுவே சாட்சி’ என்று கூறியிருந்தார்.

இதே குற்றச்சாட்டை வலியுறுத்தும்விதமாக, பாஜகவை சேர்ந்த குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை உள்ளது. யாராவது முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தைக் காட்ட முடியுமா? நீண்ட நாட்களாகவே அவர் உறக்கத்தில் இருந்துள்ளார்’ என்று முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com