

அமெரிக்காவின் பாம் பீச் பகுதியில் உள்ள மார்-எ-லாகோ (Mar-a-Lago), அதிபர் டொனால்ட் டிரம்புக்குச் சொந்தமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடம்பர இல்லம் உள்ளது. புத்தாண்டையொட்டி, இந்த இல்லத்தில் சிறப்பு விருந்தும், ஒரு தொண்டு நிறுவன ஏல நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சிறப்பு விருந்தில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விருந்து நிகழ்ச்சிக்கு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆன்மீக ஓவியக் கலைஞர் வெனெசா ஹோரபியூனா (Vanessa Horebuna), மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி ‘ஸ்பீட் பெயிண்டிங்’ மூலம் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை வரைந்தார். பின்னர் அந்த ஓவியம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
யார் இந்த வெனெசா ஹோரபியூனா :
வெனெசா ஹோரபியூனா ஒரு சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'லைவ் ஸ்பீட் பெயிண்டிங்' (Live Speed Painting) கலைஞர் ஆவார்.இசைக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டே மிகக் குறுகிய காலத்தில் (சில நிமிடங்களில்) பிரம்மாண்டமான ஓவியங்களை வரைவதில் வல்லவர்.பெரும்பாலும் ஆன்மீகம் மற்றும் உத்வேகம் அளிக்கும் உருவப்படங்களை இவர் வரைவார்.
இவர் தனது கலைத்திறன் மூலம் திரட்டப்படும் நிதியை உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் ஏழை எளியவர்களின் கல்வி மற்றும் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்.
அதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மேடையில் ஏறி ஏலம் கேட்கத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஏலம் கேட்கத்தொடங்கி இறுதியாக 2.75 மில்லியன் டாலர் என்ற விலையுடன் ஏலத்தை நிறைவு செய்தார். வெனெசா ஹோரபியூனா வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.90 லட்சமாக இருந்தது.
அதன்படி இயேசு ஓவியம் சுமார் 2.75 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.24.75 கோடி) விற்பனையானது. மேலும் டிரம்ப் அந்த ஓவியத்தில் தனது கையெழுத்தைப் போட்ட பிறகு, அதிக விலையில் ஏலம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் டிரம்ப் St. Jude's குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தின் தொண்டு பணிகளுக்காக வழங்கப்பட்டது.