

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான ஏற்காடு, இனி மேலும் புதுப்பொலிவு பெற்று சுற்றுலா பயணிகளை அசத்தும். காரணம் அரசு அறிவித்துள்ள திட்டங்கள். இந்த திட்டங்கள் முழுமையடைந்த பின் ஏற்காட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கூடும். ஆம் ஏற்காட்டில் பத்து கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கும் என்றும் அங்குள்ள எமரால்டு ஏரியில் 3டி தொழில் நுட்பத்தில் நீர் சார்ந்த ஒலிஒளிக் காட்சி அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது ஏற்காட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர். கிழக்கு தொடர்ச்சி மலையின் சேர்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காடு மலை. ஏரியும் காடும் சூழ்ந்த பகுதி என்பதால் ஏரிக்காடு என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி ஏற்காடு என்று அழைக்கப்படுவதாக தகவல்.
கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு சேலம் மாவட்டத்தில் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலமாகவும் திகழ்கிறது. சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் மலிவாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் தேர்ந்தேடுப்பது பெரும்பாலும் ஏற்காட்டையே. மலையின் துவக்கமான அடிவாரத்தில் இருந்து வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், உற்சாக மூட்டும் கொண்டை ஊசி வளைவுகள், நெடிதுயர்ந்த மூலிகை மரங்கள், பாறைகளின் இடுக்குகளில் வழியும் திடீர் நீரூற்றுகள் என மனம் நிறையும் இயற்கையை ரசிக்கலாம்.
ரசித்தபடியே கடந்து சென்றால் பசுமை படர்ந்து ஏற்காடு நகரம் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏற்காட்டில் நுழைந்தவுடன் நம் கண்ணில் விழுந்து கவனத்தைக் கவர்வது பரந்த விரிந்த ஏரியே. தென்னிந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் செயற்கையாக உருவாக்கப் பட்ட ஏரிகளே அதிகம். ஆனால் இயற்கையாக அமைந்த சொற்ப ஏரிகளில் இயற்கையின் கொடையாக அமைந்திருப்பது தான் ஏற்காடு எமரால்டு ஏரி.
அடர்ந்த மரங்களும் தோட்டங்களும் சூழ்ந்து இருக்கும் இடத்தில் நீரின் குளிர்ச்சியை அனுபவித்தபடியே செய்யும் படகு சவாரி வாழ்வின் சொர்க்கம். ஏற்காடு என்றாலே ஏரியின் குளிர்ந்த நீரில் படகு சவாரி செய்வது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம் என்று தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
ஏரிக்கு அருகிலேயே அண்ணா பூங்கா, ஓய்வு இல்லம் என்று இடங்கள் இருப்பதும் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த நிலையில் ரூபாய்10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கும் என்று சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அரசு அறிவித்துள்ளது. இதில் எம்ரால்டு ஏரியில் 3டி தொழில்நுட்பத்தில் நீர் சார்ந்த ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
இது குறித்த சுற்றுலா மேம்பாட்டு ஆர்வலர்கள் கூறுகையில் “சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மிகச்சிறந்த வாசஸ்தலமான ஏற்காட்டில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் எமரால்டு ஏரி, பார்வையாளர் மடம், நடைபாதைகள், பறவைகளை காண்பதற்கான காட்சி முனைகள் , நில சீரமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகள் நிச்சயமாக ஏற்காட்டில் கட்டமைப்பை அடுத்தடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும்.
இதில் முக்கியமாக ஏற்காட்டில் சிறப்பான ஏரியில் படகு சவாரி செய்தபடி புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் 3d ப்ரோஜெக்சன் மேப்பின் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும் ஒலி ஒளி காட்சி புதிய அனுபவத்தை தரும் . அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் இந்த ஒலி ஒளி காட்சி ஆனது ஏரியில் படகு சவாரி செய்து கண்டு ரசிக்கும் வகையில் இடம் பெறும். வெளிநாடுகளில் இயற்கையோடு விஞ்ஞானத்தை இணைக்கும் இது போன்ற காட்சி அமைப்புகள் ஏராளமான சுற்றுலா தலங்களில் உள்ளது. அந்த வகையில், ஏற்காடு ஏரியில் அமைக்கப்படும் தொழில் நுட்பமானது சுற்றுலா மேம்பாட்டில் ஏற்காட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றனர் ரசித்து அனுபவிக்க எதிர்பார்த்து காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.