கருணாநிதி, ஜெயலலிதா பாணியில் முதல்வர் விஜய்க்கு நடக்கும் 'அந்த' பிரம்மாண்ட விழா..!

Vijay karthik Nasar karunas
Vijay with Thenninthiya nadigar sangamX
Updated on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நடிகர் விஜய் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். யார் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் உடனடியாக அவர்களை சந்தித்து, ஆதரவு கொடுப்பது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாடிக்கை. தமிழக அரசியலில் திரைத்துறையில் இருந்து வந்து முதல்வர் பதவியில் அமர்ந்தவர்கள் தான் மிகவும் அதிகம். திரைத்துறை சாராத ஒருவர் இங்கு பிரபலமாகி அரசியல் செய்வது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.

அதேநேரம் எம்ஜிஆருக்கு பின்னர் ,நடிகர் ஒருவர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தது எல்லாம் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக இருக்கிறது. தமிழக அரசியலில் எம்ஜிஆருக்கு பின்னர் ஒரு சில நடிகர்கள் அரசியல் கட்சியை தொடங்கி , செயல்பட்டு வந்தாலும் யாராலும் முதல்வர் பதவியை அடைய முடியவில்லை. அதேவேளையில் தமிழ்நாட்டில் முதல்வர் பதவியில் அமர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாகவே இருக்கின்றனர். தமிழக மக்களின் மனதில் சினிமா அந்த அளவுக்கு ஆழமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த விஜயை, தமிழ்த்திரை உலகை சார்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி, மாற்று மொழி திரைப்பட கலைஞர்களும் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி , துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது விஜய்யையும் , அவரது கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் , திரைத்துறை சார்ந்த ஒரு சில கோரிக்கைகளை முதல்வரிடம் முன் வைத்துள்ளதாக வெளிவந்துள்ளன. இவர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமாக வீடியோ பைரசி பிரச்சனை ஒன்றாக இருக்கலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய காலத்தில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே , இணையதளங்களில் வெளியாகி பட தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்கின்றன. இது போன்ற சூழ்நிலைகள் இனி வருங்காலங்களில் நடைபெறக்கூடாது என்பதற்காக இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கலாம். மேலும் நடிகர் சங்கத்தினரின் கோரிக்கைகளில் ஒன்றாக, நீண்ட நாள் இழுபறியில் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக திரைத்துறையை சேர்ந்த அரசியல்வாதிகள் முதல்வர் பதவியேற்கும் போது, நடிகர் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது வாடிக்கை. இதற்கு முன்னர் மு.கருணாநிதி, செல்வி ஜெ.ஜெயலலிதா , முக.ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் பதவியேற்ற போது, நடிகர் சங்கம் அவர்களுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியுள்ளது. அதுபோல விஜய்க்கும் விரைவில் பாராட்டு விழா நடத்தப்பட வாய்ப்புள்ளது!

logo
Kalki Online
kalkionline.com