
பொதுவாகவே அனைவருக்கு வயசு ஏறிட்டே போது என்று தான் சொல்வாங்க. ஆனால் தென்கொரிய மக்களுக்கு மட்டும் 2 வயது குறைந்துள்ளதாம் எப்படி என்று தானே கேட்கிறீர்கள் வாங்க பார்க்கலாம்.
இளமை திரும்புதா எனக்குனு கேட்போம். ஆனால் உண்மையிலேயே இளமை திரும்பினால் சந்தோஷமாகத்தானே இருக்கும். முன்னதாக தென்கொரிய நாட்டில் குழந்தை பிறந்ததும், அதற்கு ஒரு வயது எனக் கணக்கில் வைத்து கொள்வர். இதையடுத்து ஜனவரி ஒன்றாம் தேதி வந்துவிட்டால் மேலும் ஒரு வயதை சேர்த்துவிடுவர். ஓராண்டு முழுமை பெறும் வரை காத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக ஒரு குழந்தை டிசம்பர் 31ஆம் தேதி பிறக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறந்ததும் ஒரு வயது எனக் கணக்கு வைக்கப்படும். அடுத்த நாள் ஜனவரி ஒன்று. அப்படியெனில் இரண்டு வயது கணக்காகி விடும்.
இப்படி ஒரு விநோதத்தை தான் இவ்வளவு நாட்களாக பின்பற்றி வந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேச அளவில் எப்படி வயது கணக்கிடப்படுகிறதோ, அதுவே இனி பின்பற்றப்படும் என்று தென்கொரியா அரசு இன்று (ஜூன் 28) அறிவித்துள்ளது. புதிய முறையின் படி தென்கொரிய மக்கள் அனைவரும் தங்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் வயதை மாற்றிக் கொள்ளலாம்.
இதன்மூலம் தென்கொரிய மக்கள் அனைவரும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வயது குறைந்து காணப்படுவர் என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு முக்கியமான விஷயத்தை தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. திடீரென வயதை கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படியெனில் சிகரெட், ஆல்கஹால் வாங்க விதிக்கப்பட்டிருக்கும் வயது வரம்பு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் உடனடியாக மாறுதல் வராது. மேலும் கட்டாய கல்வி, 21 மாதங்கள் ராணுவ சேவை ஆகியவற்றிலும் மாற்றங்களை அமல்படுத்த சிறிது காலம் ஆகும். அதுவரை முந்தைய முறையே தொடரும் எனக் கூறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கை மூலம் சட்ட ரீதியிலான பிரச்சினைகள், புகார்கள், சமூக குழப்பங்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலர் அடுத்த வருடம் நாங்கள் 60 வயதை கடப்பதாக இருந்தது. புதிய அறிவிப்பால் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு இளமையாகவே இருப்போம் என்று மகிழ்ச்சியாக வலம் வர தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் கேட்டால் எங்கள் வயதை சர்வதேச அளவிலான நடைமுறையின் படி மாற்றி மாற்றி தான் கூறி வந்தோம். இனி இதுபோன்ற குழப்பங்கள் இருக்காது என்கின்றனர். சில விஷயங்களில் புதிய வயது கணக்கிடும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உடனடியாக செயல்படுத்தினால் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்படும். சிறிது காலம் கழித்து அமல்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.