தேஜஸ் ரயில் நாளை (12.04.23) திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டுவரும் இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கட்டுமான பணிகளின் காரணமாக சென்னை, மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும் (ஏப்ரல் 12), சென்னை குருவாயூர் இடையேயான இரண்டு ரயில்கள் இன்றும் நாளையும் (ஏப்ரல் 11,12) பயணத்தில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வெளியூருக்கும், அதே சமயம் வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக உள்ளது. இதில் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களுக்கு தேஜஸ் ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
திருச்சி பகுதியில் கட்டுமானப் பணிகள் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி தேஜஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 12ம் தேதி சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேநாளில் மறுமார்க்கத்தில் மதுரையில் புறப்பட வேண்டிய ரயில், திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்படும். தாமரைப்பட்டி- வடமதுரை இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில் சென்றடைகிறது.
அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் பயணிகளுக்காக சொகுசு இருக்கைகள், குளிர்சாதன வசதி, பலவகை உணவு விநியோகம், தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
திருச்சி பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 13-ந் தேதியில் இருந்து தேஜாஸ் ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.