அமைச்சர் பதவி கேட்கப்பட்டதா..? - உடைத்து பேசிய எஸ்.பி வேலுமணி

S.P.VELUMANI
S.P.VELUMANI
Updated on

சென்னை எம்.ஆர்.சி. நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவிற்கு ஆதரவு அளிக்கவில்லை, திமுக எதிர்ப்பு எனும் காரணத்திற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்ததாக கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் பலவிதமாக பேசப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது:

அமைச்சரவையில் இடம் பெறாததால் நாங்கள் அதிருப்தியில் இருப்பதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஏமாந்து விட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். ஒரு சிலர் எங்களுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என அவ்வாறு பரப்புகின்றனர். அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்று நாங்கள் ஒரு முறை கூட கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இதைக் கூறி வருகின்றனர். பதவிக்காக நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தவெக தரப்பும் அமைச்சரவை தொடர்பாக விளக்கமளித்து விட்டனர்.

அதிமுக தோல்வியை தழுவியுள்ளது என்பதை ஏற்கிறோம். அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. கருத்து வேறுபாட்டை நீக்கவே பொதுக்குழுவை கூட்டுமாறு கூறுகிறோம் என்றார். குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தொடர்ந்து தவறாக எழுதி பெரும் குழப்பத்தை விளைவிக்கிறார்கள். கட்சியை உடைக்கும் எண்ணம் இல்லை. ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதே எண்ணம் என்று கூறினார். இப்போதும் எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர். பதவிக்காக ஒரு பிரிவாக செயல்படுகிறோம் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com