பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப் பட்டது 

இந்நிலையில் டெல்லியில் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது. அங்கு  காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபல் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கினர். 

டெல்லியில் பிரதமர் இல்லம், மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை  நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டெல்லி காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 5) அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி-க்கள் ஆகியோரையும் காவல்துறை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றது. பிரியங்கா காந்தி தன்னை கைது செய்வதற்கு எதிராக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அதையும் மீறி அவரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் 

காங்கிரஸ் கட்சியின் போராட்டம் மற்றும் அக்கட்சித் தலைவர்கள் கைது காரணமாக டெல்லியிலும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸார் சென்னை கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணி கவர்னர் மாளிகை அருகே நெருங்கியதும், இப்பேரணியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com