தாலியைக் கழற்றியதால் டைவர்ஸ்?!

தாலியைக் கழற்றியதால் டைவர்ஸ்?!

-தனுஜா ஜெயராமன் 

பொதுவாக திருமணத்தில் தாலி கட்டுதல் என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தாலியை புனிதமான சின்னமாகவும் கருதுகின்றனர். அத்தகைய தாலியை திருமணமான பெண் ஒருவர் கழற்றி வைத்ததாக சொல்லப்படும் வழக்கினில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன?

ஈரோட்டை சேர்ந்த தம்பதிகள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில் அந்த கணவர் மருத்துவதுறை பேராசிரியர். அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆவார். இவர் தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனரீதியாக துன்புறுத்துவதாகவும் இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்தே அந்த கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது.

இதனை நீதிபதிகள் வி.எம்.வேலு மற்றும் எஸ் .சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதில் மனுதாரரின் மனைவி அவரது கணவரின் பணியிடத்திற்கு சென்று அவதூறு பரப்பியது மன ரீதியாக துன்புறுத்தியது எனவும் வழக்கு நடைபெற்றிருக்கும் போதே தாலி சங்கிலியை கழற்றி வைத்ததும் மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சல் அளித்தது எனவும் கூறி விவாகரத்து வழங்கப்பட்டது. இதுவே சர்ச்சையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

இந்த வழக்கில் கணவனும் மனைவியும் 2008 ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இது தவிர மனைவி கணவரின் நடத்தை குறித்து சந்தேகம் கொள்வது, அவரது பணியிடம் சென்று அவதூறு பரப்பியது மற்றும் அடிப்படை முகாந்திரம் ஏதுமின்றி கணவரை பற்றி காவல்நிலையத்தில் புகாரும் அளித்ததோடு தனது தாலியையும் கழற்றி வைத்துள்ளார். எனவே இதே குறித்து நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தாலியை கழற்றியதை மனைவியே ஒப்பக்கொண்டுள்ளார்.. 

திருமணமான பெண் தாலியை கழற்றியது அவருக்கு கணவருடன் தொடர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்பதை காட்டுவதாகவும்.. மேற்கூறிய பல செயல்கள் மனுதாரருக்கு மன உளைச்சலை அளிப்பதாகவும் கூறியே விவாகரத்து வழங்கபட்டிருக்கிறது என்பதே உண்மை. ஆனால் மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் அதனை அப்படியே வெளியிட்டதாகவும் கருதிய நிலையில் தற்போது இது குறித்து மீடியாக்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ.. சினிமாவில்தான் தாலி சென்டிமெண்ட்டை வைத்து கதை உருவாக்கி, பெண்கள் ஓட்டைக் கவர முயற்சிப்பார்கள் என்றால், கோர்ட் தீர்ப்பிலுமா அப்படி என்று பல பெண்கள் முணுமுணுக்கவே செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com