வைகுண்ட ஏகாதசிக்கு சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்களில் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என அக்கோயிலின் இணை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கோயில்களின் துணை செயல் அதிகாரிகளுடன் நேற்று காணொலி வாயிலாக ஆய்வு நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நாட்டில் பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி நாளில் ஶ்ரீனிவாசமங்காபுரம், அப்பலாயகுண்டா கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம், அமராவதி கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே அனைத்து கோயில்களிலும் வரிசை அமைத்து, விஐபிக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.
மற்றபடி பொது தரிசனத்தில் பக்தர்கள் சிரமப்படாமல் கோவிலுக்குள் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த பகுதி உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் வைகுண்ட ஏகாதசிக்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு பக்தருக்கும் பிரசாதம் கிடைக்கும் வகையில், தீர்த்தம் தயாரிக்க வேண்டும்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.