

வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற 31.01.2026 வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 31-ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நடக்கிறது. இந்த கார்டை பெற இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
தென் சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலை நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள், தகுதிகள் :
இதனை விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, யுடிஐடிஅட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மருத்துவ சான்று, கல்வி பயில்வதற்கான சான்று, பணியிடச் சான்று ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.
தனியார் நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்கள், பயண வரம்புகள் மற்றும் பிரிவுகள், பார்வைக் குறைபாடுடையோர், கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதவர்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.