திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை - பணத்தை மீட்க ஹரியானா பயணம், கிளைமாக்ஸை நெருங்கும் விசாரணை!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை - பணத்தை மீட்க ஹரியானா பயணம், கிளைமாக்ஸை நெருங்கும் விசாரணை!

கடந்த மாதம் சென்னையிலும் திருவண்ணாமலையிலும் நிகழ்த்தப்பட்ட கொள்ளை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவில் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலை ஒரே இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளையடித்துவிட்டு ஏடிஎம் மெஷினுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிய கொள்ளைக் கும்பலை கடந்த ஒரு மாதமாக காவல்துறை தேடிவருகிறது. விசாரணையின் ஆரம்பகட்டத்திலேயே வட மாநில கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், கொள்ளையடித்துவிட்டு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு தப்பியோடிவிடுவதாகவும் தெரிய வந்தது.

பெரும்பாலான சம்பவங்களில் உள்ளூர் திருடர்கள் சம்பந்தப்படவில்லையென்றால் வட மாநில கொள்ளையர்களின் வேலை என்று செய்திகள் பரப்பப்படுவது தமிழ்நாட்டில் உள்ள வட இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர். இதில் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தை தீட்டிய முகமது ஆரிப், ஆஜாத் உள்ளிட்டவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள். அவர்களிடமிருந்து சில லட்சம் பணமும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோலாரில் இருந்த கொள்ளைக் கூட்டத்தையும் தேடிப்பிடித்தார்கள். கொள்ளையடித்த 70 லட்ச ரூபாய் பணம் ஹரியானாவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. முதலில் வங்கியை கொள்ளையடிப்பதுதான் திட்டமாக இருந்திருக்கிறது. அது முடியாதபோதுதான் ஏ.டி.எம்மை உடைத்து அதிலிருந்து பணத்தை கண்டெய்னர் லாரியில் ஹரியானாவுக்கு கடத்தியிருக்கிறார்கள்.

தடயங்களை அழிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்களை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள். சோதனை சாவடிகள் இல்லாத வழியாக சென்று, பல மாநிலங்களை கடந்து ஹரியானாவுக்கு தப்பிச் சென்றார்கள். ஹரியானாவில் 70 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்துள்ள இடத்தை கண்டுபிடித்துள்ள காவல்துறையினர் அதை மீட்பதற்கு ஹரியானாவுக்கு சென்றிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வந்த காட்சிகளெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகி வருகிறார்கள். சிக்கலான வழக்கை கையிலெடுத்து, விசாரணையின் முடிவை நெருங்கியிருக்கும் தமிழக காவல்துறையை பாராட்டியாக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com