திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா? அப்போ இந்த குட்நியூஸ் உங்களுக்குத்தான்!

திருவண்ணாமலை அண்ணாமலையார்
திருவண்ணாமலை அண்ணாமலையார்Intel
Published on

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்ககூடிய அண்ணாமலையார் கோயிலுக்கு மாதம் தோறும் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

அதுவும் குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தான் பக்தர்கள் அதிகம் கிரிவலம் வருவார்கள். இந்த கிரிவல பாதை 14 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும். பக்தர்களின் வசதிக்காக கிரிவல பாதையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்துவிட்டது. ஆவணி மாத பௌர்ணமியானது, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வருகிறது. பலரும் ஆவணி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை செல்ல பலரும் திட்டம் போட்டு இருப்பார்கள். இவர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பௌா்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வேலூா் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06127) ஆகஸ்ட் 30 ஆம் தேதி வேலூரில் இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - வேலூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06128) ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை - வேலூா் - சென்னை கடற்கரை (06033, 06034) ரயில்களாக இயக்கப்படும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06129) ஆகஸ்ட் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூா், திருக்கோயிலூா், ஆதிச்சநல்லூா், அண்டபள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயிலானது (06130) ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு தண்டரை, அண்டபள்ளம், ஆதிச்சநல்லூா், திருக்கோயிலூா், அயந்தூா், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் - மயிலாடுதுறை ( 06690, 06691) ரயில்களாக இயக்கப்படும். விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06131) வரும் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 க்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06132) ஆகஸ்ட் 31ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, விழுப்புரத்துக்கு காலை 5 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் (06028, 06027) ரயில்களாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com