சபரிமலை சீசனையொட்டி சென்னை - நெல்லை இடையே நாளை மறுதினம் முதல் டிசம்பர் 28 வரை, வியாழக்கிழமைகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் ஏராளமானோர் சபரிமலைக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளதால் அனைவரும் சபரிமலைக்கு செல்ல தயாராகியுள்ளனர்.
சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை சீசன் தொடங்குவதால் சிறப்பு வந்தே பாரத் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல் , வியாழக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் நின்று செல்லும்.
சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையும் வர உள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.