சீனாவில் ஒரு பெண்ணின் காதுக்குள் சிலந்தி ஒன்று கூடுகட்டி மகிழ்ச்சியாக வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் காது வலியால் அவதிப்பட்ட பெண், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவர்கள் அவர் காதில் எண்டோஸ்கோபி செய்து பார்த்தனர். அப்போது அதில் மருத்துவர்கள் பார்த்த காட்சியானது அவர்களை திகைக்கச் செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டிருக்கிறார். அதுபோக அவருடைய காதுகளில் எப்போதும் ஏதோ ஒன்று ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. இது சாதாரணமான ஒன்றுதான், விரைவில் சரியாகிவிடும் என நினைத்த அவருக்கு மேலும் மேலும் அந்த சத்தம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். மருத்துவரிடம் நடந்த விஷயத்தைக் கூறி ஆலோசனை கேட்டுள்ளார். உங்கள் காதுகளுக்குள் எண்டோஸ்கோபி செய்து பார்க்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது, காதுக்குள் சிலந்தி ஒன்று கூடு கட்டி குடித்தனம் நடத்தி வந்த விவரம் தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் ஒரு நொடி ஷாக் ஆகி, சிலந்தியை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். "டேய் என் வீட்டிலிருந்தா என்னை வெளியே துரத்த பாக்குறீங்க" என அந்த சிலந்தியும் எண்டோஸ்கோப்பி கருவியை தன் பற்களால் பதம் பார்த்துள்ளது. இறுதியில் ஒரு வழியாக மருத்துவர்கள் படாத பாடுபட்டு அந்த சிலந்தியை காதிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, "காது வலிக்கிறது என பெண் ஒருவர் எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார். அவர் காதை பரிசோதிக்க எண்டோஸ்கோபி வழியாக காதினுள்ளே பார்த்தபோது, செவிப்பறை போலவே சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். முதலில் நாங்கள் அதை செவிப்பறை என்றே நினைத்தோம். ஆனால் அதை உற்றுப் பார்த்த போது தான் அதற்குள் ஏதோ ஒன்று அசைவது தெரிந்தது. அதன் பின்னர்தான் காதுக்குள் இருப்பது சிலந்தி வலை என்பதை புரிந்துகொண்டு, அந்த சிலந்தியை வெளியே எடுத்தோம்" என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நல்லவேளை அந்த சிலந்தி விஷத்தன்மை அற்றதாக இருந்ததால், பெண்ணின் காதில் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. "சீனாக்காரன், சீனாக்காரன் தான்யா. சிலந்திக்கெல்லாம் காதை வாடகைக்கு விட்டிருக்கான்."