நிதிஷ் கட்சியில் பிளவு ஏற்படுவது உறுதி: சுஷில்மோடி தகவல்!

நிதிஷ் கட்சியில் பிளவு ஏற்படுவது உறுதி: சுஷில்மோடி தகவல்!
Published on

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித்குமார் அதிரடியாக தனது ஆதரவாளர்களுடன் ஆளும் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், பிகாரில் நிதஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும்  பிளவுபடும் வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க.வின் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக பேச்சு நடத்தி வருகின்றனர். எனவே  நிதிஷ்குமாரின் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான   அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே அக்கட்சி பிளவு படுவது உறுதி. அடுத்த சில நாட்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

எனினும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து வெளியேறும் அதிருப்தியாளர்களை பா.ஜ.க. இணைத்துக் கொள்ளுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். எனினும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க.வின் கதவுகள் மூடியே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதிஷ்குமார் பாஜக முதுகில் குத்தியது குறித்து ஐக்கிய ஜனதாதளத்தில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை. எனக்குப் பின் தேஜ்ஸ்வி யாதவ்தான் என்று நிதிஷ்குமார் வெளிப்படையாக அறிவித்ததிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் குமுறலுடன் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு அடுத்த தேர்தலில் தங்களுக்கு தேர்தல் டிக்கெட் கிடைப்பது கடினம் என்றும் நினைக்கிறார்கள் என்றார் சுஷில் மோடி.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்தது. ஆனால், இன்றைய சூழலில் அக்கட்சிக்கு 8 முதல் 10 இடங்கள் கிடைப்பதே பெரிய விஷயம். எனவே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் பலர் நமது எதிர்காலம் இருண்டுவிடுமோ என்று பீதியில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இதர அரசியல்கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், அதிரடியாக ஆளும் கூட்டணியில் சேர்ந்ததை அடுத்து இப்போது நிதிஷ்குமார், தமது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார். ஏனென்றால் கட்சியை விட்டு சிலர் விலகி வேறு கட்சியில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது என்றார் சுஷில்மோடி.

ஆனால், ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து பலரும் விலகத் தயாராக இருப்பதாக சுஷில் குமார் கூறிவருவது போலியான பிரசாரம் என்கிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். சுஷில் மோடி முட்டாள்களின் உலகத்தில் இருக்கிறார். ஐக்கிய ஜனதாதளத்தில் எந்த பிளவும் ஏற்பட வழியில்லை. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் நிதிஷ்க்கு நெருக்கமானவரும், கட்சியின் தேசியத் தலைவருமான லல்லன் சிங்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com