அணியினர் விடுதியில் தங்கியிருக்க, பயிற்சிக்கு வீட்டிலிருந்து மைதானத்திற்கு வரும் கோலி!

அணியினர் விடுதியில் தங்கியிருக்க, பயிற்சிக்கு வீட்டிலிருந்து மைதானத்திற்கு வரும் கோலி!

ஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கும் நிலையில், விராட் கோலி டெல்லியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

டெல்லியில் விளையாடும் போட்டிகள் என்றால் இந்திய அணியினரை எப்போதும் தாஜ் பேலஸ் ஹோட்டல் அல்லது ஐடிசி மௌரியா ஆகிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைப்பதுதான் வழக்கம்.

தற்போது திருமண முகூர்த்த நேரம் மற்றும் ஜி20 மாநாடு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து ஹோட்டல் அறைகளும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் உள்ள லீலா ஹோட்டல்களில் இந்திய அணியினர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
வழக்கமாக தங்கும் ஹோட்டல் கிடைக்காத நிலையில், விராட் கோலி அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளார். விராட் கோலி பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். அவரது குடும்ப உறவினர்களும் டெல்லியில் வசிக்கிறார்கள். இதனால், ஹோட்டல் கிடைக்காமல் இருந்த நிலையில், விராட் கோலி மட்டும் இந்திய அணியிலிருந்து விலகி, அவரது சொந்த வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

பல வருடங்களுக்குப் பிறகு தினமும் வீட்டிலிருந்து நீண்ட தூரப் பயணமாக மைதானத்தை நோக்கி காரில் செல்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஹோட்டல் இருந்து இந்திய அணியினர் வருவதற்கு முன்னதாகவே விராட் கோலி தனது காரில் புறப்பட்டு டெல்லி மைதானத்திற்கு வந்து பேட்டிங் பயிற்சியை மேற்கொள்கிறார். மைதானத்தில் பயிற்சி செய்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் தனது ஆலோசனையும் வழங்கி வருகிறார். 

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com