IPL 2023 : கடைசி 8 ஓவரில் 107 ரன்கள்... மும்பையை திக்குமுக்காடச் செய்த குஜராத் டைடன்ஸ்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை அணியும் மோதிய நிலையில், குஜராத் டைடன்ஸ அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கும், மும்பை அணிக்குமான ஐபிஎல் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிலையில், டாஸை வென்ற மும்பை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் விரிதிமன் சாஹா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
இதில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விரிதிமன் சாஹா மட்டும் சரியான துவக்கத்தைக் கொடுக்காத நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி, சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்துகளில் 46 ரன்களும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்களும், ராகுல் டிவாட்டியா 5 பந்தில் 20 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் அணியைப் பொறுத்தவரை, 12.2 ஓவரில் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. 4 விக்கெட்டுகள் பறிபோனதால் போனதால், 20 ஓவரில் 170 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 8 ஓவர்களில் 107 ரன்களைக் குவித்தனர்.

டேவிட் மில்லர் 4 சிக்ஸர்களும், அபினவ் மற்றும் டிவாட்டியா தலா 3 சிக்ஸர்களும் விளாசி, மும்பை அணியை திணறடித்தனர். அதிலும் ராகுல் டிவாட்டியா வெறும் 5 பந்துகளில்தான் இந்த 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்டு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
நேற்றைய போட்டியில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர் என வீரர்கள் சராசரியான ரன்களை எடுத்தாலும், யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, குஜராத் டைடன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதையடுத்து, தனது 5வது வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.