நேற்றைய போட்டியில் வானைப் பிளந்த 24 சிக்ஸர்கள்! யார் யார் அதிக சிக்ஸர் தெரியுமா?
நேற்றைய ஆட்டம் டெல்லி அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்த நிலையில், டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023 16வது சீசன் தொடரின் 64வது போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. தொடர்ந்து டாஸை வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து டெல்லி அணியின் டேவிட் வார்னர், பிரித்வி ஷா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டம் துவங்கியது முதலே அதிரடி ஆட்டம் ஆரம்பமானது.
டேவிட் வார்னர்46 ரன்களும், பிரித்வி ஷா 54 ரன்களும், ரிலே ரொசோ 82 ரன்களும், பில் சால்ட் 26 ரன்களும் என அனைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாடி அவரவர் பங்குக்கு சிக்ஸர் மழையையும் பொழிந்தனர். இதையடுத்து டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களமிறங்கினர். இந்த அணியில் ஷிகர் தவான், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட்டானாலும், மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
இந்த அணியில் அதர்வா டைட் 55 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 94, ஷாருக்கான் 6 ரன்களும், சாம் கரண் 11 ரன்களும் எடுத்த நிலையில், இவர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு சிக்ஸர்களை விளாசினர்.

இந்த போட்டியைப் பொறுத்தவரை ரிலோ ரொசோ 6 சிக்ஸர்களும், லிவிங்ஸ்டோன் 9 சிக்ஸர்களும் விளாசிய நிலையில், மொத்தம் இந்த போட்டியில் மட்டும் 24 சிக்ஸர்கள் தெறிக்கவிடப்பட்டன.
லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கினாலும், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து தனது 5வது வெற்றியை ருசித்தது.
37 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய ரிலே ரொசோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.