
* டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இதுவரையில் பல ஆட்டக்காரர்கள் சதம் எடுத்துள்ளனர். சிலர் இரட்டை சதம் அடித்துள்ளனர். வெகு சிலரே மூன்று சதங்கள் எடுத்துள்ளனர். ஒருவர் மட்டுமே ஒரே இன்னிங்சில் 400 ரன்களும் குவித்து சாதித்து உள்ளார். அதே போல 99 ரன்கள் மற்றும் 199 ரன்களில் ஆட்டம் இழந்தவர்களும் உண்டு. ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தான் 299 ரன்கள் குவித்த பொழுது தனது ஆட்டத்தை இழந்தார். அவர்தான் நியூஸிலாந்து அணி கேப்டன் மார்டீன் க்ரோ.
இவர் 1991ல் வெல்லிங்டன் மைதானத்தில் ஸ்ரீ லங்கா அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில், ரணதுங்கா பவுலிங்கில், திலகரத்னேயிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இவரைத் தவிர, அந்த மேட்சில் சதங்கள் எடுத்தவர்கள் விவரம். நியூஸிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஜோன்ஸ் 186 ரன்கள். ஸ்ரீ லங்காவின் அரவிந்தா டீ சில்வா 267 ரன்கள். அந்த மேட்ச் டிராவில் முடிவு பெற்றது..!
--------------
* சமீபத்தில் தனது 87 வது பிறந்த நாளைக் கொண்டாடிய மேற்கு இந்திய அணியின் சிறந்த ஆட்டக்காரரர்களில் ஒருவரான ரோஹன் கன்ஹாய் டெஸ்ட் மேட்சுகளில் 6227 ரன்களை குவித்தவர். பொறுமைசாலியான இவர் தனது சிறப்பான ஆட்டத்தை பல முறை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
1975 முதல் உலக கோப்பை ஒரு நாள் பந்தயத்தில் மேற்கு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. அணியின் கேப்டன் க்ளைவ் லாயிட் சதம் அடித்தார். எதிர் முனையில் துணைக்கு நின்று தனது அனுபவத்தை அபாரமாக வெளிப்படுத்தினார் ரோஹன் கன்ஹாய். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நின்று ரன்கள் குவித்ததோடு, தனது விக்கெட்டையும் இழக்காமல் லாயிடுக்கு உறுதுனையாக இருந்த ரோஹன் கன்ஹாயின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. அவருடைய அனுபவமும், திறமையும் அன்றைய ஆட்டத்தின் மூலம் நிரூபிக்கபட்டது மட்டுமல்லாமல், மேற்கு இந்திய தீவு அணி வெல்ல உதவியது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ரோஹன் கன்ஹாய் எடுத்த ரன்கள் 55.